பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

பதிற்றுப்பத்து தெளிவுரை

அவன் குளிர்ந்த இனிய மென்மையினன் என்பதனையும் இப்போது யானும் அறிந்தேன்!

சொற்பொருளும் விளக்கமும் ; உறல் உறு குருதி - ஒழுகுதல் உறுகின்ற குருதி; குருதி - செந்நீர். புலவ - புலால் நாற்றம் எழ. அமர்க்கடந்த - போரிலே வஞ்சியாது எதிர்நின்று வெற்றி பெற்ற. வெந்திறல் - கோடிய போர்த்திறல். தடக்கை - பெரிய கை. பொறையன் - பொறையர் மரபினன். வெருவர - அஞ்சும்படியாக. ஆடூஉ -ஆண்மகன். 'மன்’ ஒழியிசைப் பொருளில் வந்தது; இப்போது அவ்வெண்ணம் ஒழிந்தது என்பதாம். நனந்தலை - பரந்த இடம். இல்லோர் - பொருளற்றோர்; வறியவர். புன்கண் - துன்பம். நாடல் ஆராய்தல். சான்ற - அமைந்த. ஆடுநடை - வெற்றி யொழுக்கம். கழை - ஓடக்கோல். குட்டம் - ஆழம். பூங்குழை - அழகிய குண்டலம் என்னும் மகளிர் காதணி. வானி - ஓர் யாறு; சேரநாட்டது. சாயல்- மென்மை.

வானியாற்றுத் தெளிந்த நீரின் தன்மையும் தெளிவும் போல, இளஞ்சேரலும் இரவலர் பாடுநர்மாட்டுத் தண்ணளியும் அன்பும் உடையவன் என்பதாம். பகைவருக்கு வெம்மையாளனாகிய அவன் எம்போல்வாருக்கு அன்பினனாதலையும் கண்டேன் என்பதுமாம்.


87. வெண்தலைச் செம்புனல்!

துறை:விறலியாற்றுப்படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்தலைச் செம்புனல். இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் அருட் சிறப்பு.

[பெயர் விளக்கம்: ’வெண்தலைச் செம்புனல்' என முரண்படக் கூறியவற்றானும், முன்னின்ற அடைச்சிறப்பானும் இப்பெயரைத் தந்தனர்: 'சென்மோ பாடினி' என விறலியை ஆற்றுப்படுத்திக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று.)


சென்மோ பாடினி! நன்கலம் பெருகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்
ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
வல்வேற் பொறையன் வல்லனால் அளியே