பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

27


வந்தவண் இறுத்த இரும்பேர் ஓக்கல்

தொல்பசி யுழந்த பழங்கண் வீழ 15
எஃகுபோழ்ந் தறுத்த வால்நிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன
நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை 20
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை அணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. 25

நின்னோடும் மாறுபட்டோரான வலிமையாளர்கள் பலரும் போர்க்களத்திலே வீழ்ந்துபடுமாறு, நின் வாள் மறவரினாலே அவரை எல்லாம் அழித்து, நீயும் வெற்றி கொண்டனை. நினக்கே உரித்தாகிய இடத்தைத் தாம் கவர்ந்துகொள்வதற்கு நினைத்தாரும், அரசச் சுற்றத்தைக் கொண்டாருமாகிய கடம்பரின் தலைவனே அஞ்சி நடு நடுங்குமாறு, அவர்க்கு உரித்தான கடலிடைத் தீவிடத்தேயும் படையோடுஞ் சென்றனை, அவரை முற்றவும் அழித்து, அவர்தம் காவன் மரமாகிய கடம்பினையும் அடியோடு வெட்டிக் கொணர்ந்த வஞ்சின வேந்தனே!

பிடரி மயிராலே அழகுபெற்று விளங்கும் கழுத்துப் புறத்தையும், நெடியதும் கூரியதுமான நகங்களையும் கொண்டதான சிங்கவேறானது இறைதேடித் திரியும் மலைச் சாரலிடத்தே, தொகுதியாக வாழ்கின்ற பிற விலங்கினங்களின் கூட்டம் எல்லாம் நெஞ்சம் துணுக்குற்றவாய் நடுங்கி அலமரும். அதனைப்போலவே, முரசுமுழங்கும் நெடிய அரணிடத்தே உள்ளாரான நின்னைப் பகைத்த வேற்று அரசர்கள் பலரும் கண்ணுறக்கம் அற்றாராய், நினக்கு அஞ்சினராய்ப் பெரிதும் நடுங்கிக் கொண்டிருக்க, மறமேம்பாட்டினாலே மிக்கு விளங்கித் திசையனைத்தும் நடுக்கமுறச் செய்யும் நின்னது மறப்புகழும் கேட்பதற்கு இனிதாயுள்ளது. அத்தகையதாகிய நினது வெற்றிச் செல்வத்தைப்பற்றிப் பிறர் எடுத்துச் சொல்லக் கேட்டபோதெல்லாம், நின்னை நேரிலே