பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்

317

யாவை என்பதனையும் உணர்த்துகின்றனர். சேரலாதனின் அளப்பரிய பேராற்றல்களை வகைப்படுத்திக் காட்டும் இவரது 'நிலம் நீர் வளி விசும்பு' எனத் தொடங்கும் செய்யுள், பழந்தமிழகத்து அரசர்களது பெருமிதநிலையை ஓவியப்படுத்திக் காட்டும் ஒப்பற்ற செய்யுளாகும்.

இவர் காலத்துச் சேரநாடுதான் எத்துணை வளமோடு திகழ்ந்திருக்கிறது! ’கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாடு' என்று கூறி, அந்தப் பெருவளமை நிலையினைக் காட்டுகிறார் இவர். நல்லவனாகிய அரசன் உலகத்தோர்க்கு உதவுதற் பொருட்டாகவேனும் நெடுநாள் வாழ்தல் வேண்டும் என்று, 'போர்வல் யானைச் சேரலாத! நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு' என்று சொல்லி மனமுவந்து வாழ்த்துகின்றார் இவர்.

பெண்மையின் சால்பை இவர் அழகாகவும் நுட்பமாகவும் எடுத்துக்காட்டுவது மிகவும் போற்றுவதற்கு உரியதாகும். ’ஆறிய கற்பின்’ அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை, அமிழ்து பொதி துவர்வாய், அமர்த்த நோக்கு, சுடர்நுதல், அசை நடை' எனவும், 'எல்லும் நனியிருந்து எல்லிப்பெற்ற அரிதுபெறு பாயல் சிறு மகிழானும், கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய, நாணுமலி யாக்கை வாணுதல் அரிவை' எனவும் இவர் வரைந்துள்ள சொல்லோவியம் பெண்மையின் பெருஞ்சால்புக்கே இலக்கணமாக ஒலிப்பதாகும்.

"மாரி பொய்க்குவதாயினும் சேரலாதன் பொய்யலன் நசையே" என்று சேரலாதனின் வள்ளன்மையையும், ’கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே' என்று அவனது ஆற்றலையும், இவை இரண்டும் ஒருசேர விளங்கும் அவனது சிறப்பையும் எடுத்துக்காட்டும் நுட்பமான புலமையாளர் இவர் ஆவர்.


2. பாலைக் கோதமனார்

இவர் பாலைத்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்லவர். கோதமனார் என்னும் பெயரினர். ’கோதமன்’ கௌதமன் என்பதன் தமிழ்ச்சொல்லும் ஆகலாம். இவர், இமயவரம்பனின் தம்பியும் மாவீரனுமாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனை. மூன்றாம் பத்தாற் பாடிப் புகழ்ந்துள்ளார். இவர் பார்ப்பனராயினும், பைந்தமிழ்ப் புலமை-