பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

பதிற்றுப்பத்து தெளிவுரை

யும், சிறந்த ஆன்மிக ஞானமும், உயரிய ஒழுக்கச் செவ்வியும் வாய்க்கப் பெற்றவராகவும், உண்மைகளைத் தெளிவுபடக்கூறும் சொல்லாட்சி படைத்தவராகவும் விளங்குகின்றனர்.

'சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி, அவை துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கை’யாளர் இவர் ஆகலாம். இவர் கடவுள் நம்பிக்கையிலும், யாக வேள்விகள் இயற்றிக் கடவுளரை மகிழ்வித்துப் போற்றுவதிலும் நம்பிக்கை உடையவர். ஆரிய மரபினரான சான்றோருள் தமிழ் கற்றுச் சிறந்தவருள் இவரும் ஒருவர்.

'இனனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து அறந்தெறி திகிரிக்கு வழியடையாகும் என்று தமிழரது அரசியல்நெறி யாதெனக் காட்டுபவரும் இவர்.

வாழ்வு எப்படி அமையவேண்டும்? 'பிறர் பிறர் ரலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது. பாத்துண்டு மூத்த யாக்கையொடு, பிணியின்று கழிய' என்று வாழ்வின் நல்லமைதியை வகுத்துக்காட்டுபவர் இவர்.

’ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்றல், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி யந்தனர் வழிமொழிந் தொழுகி, ஞாலம் நின்வழி யொழுக' எனப் பாடும் இவர். அந்தக் கோட்பாட்டைத் தமிழரசர் ஏற்று நடக்கவேண்டும் எனவும் விருப்பம் கொள்ளுகின்றனர்.

இவ்வாறு, அறநெறியே நிரம்பிய உளத்தவர் இவராதலினாலே, போரால் நாட்டின்கண் உண்டாகும் அழிபாடுகளை எல்லாம், கற்பார் நெஞ்சம் கரைந்துருளுமாறு எடுத்துக் காட்டி, நிலையாமையை உணர்த்தி, நெறிநின்று வாழ்தலையும் மிக வலியுறுத்துகின்றனர்.

ஐந்திணைச் சால்புகளையும் அழகுறக் காட்டும் இவரது ’இணர்ததை ஞாழல்' என்னும் செய்யுள் கற்றுக் கற்று இன்புறுதற்கு உரிய ஒரு சிறந்த செய்யுளாகும்.

'மந்திரத்து அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்’ என்று, கடவுள் வழிபாட்டை முன்னின்று நடத்திய தொழிலினரையும் இவர் செய்யுள் காட்டுகின்றது.