பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்

319

இவ்வாறு, இவர் செய்யுட்கள், தமிழகமருங்கிலே ஆரிய முனிவர்களது வேதவேள்வியும் நிலையாமையும் பற்றிய கொள்கைகள் பரவமுற்பட்ட நிலையையும், அவற்றைத் தமிழ் அரசருட் சிலரும் ஏற்றுப்போற்றிய மாற்றத்தையும் காட்டும் வரலாற்று விளக்கங்களாகவும் அமைந்துள்ளன.

இப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த குட்டுவன், 'நீர் வேண்டியது கொண்மின்' என, இவரும் 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என்றனராம். அவ்வாறே பத்துப் பெருவேள்விகளை வேட்பித்து, அவர்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்பினான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்று இப்பத்தின் பதிகம் கூறுகின்றது.

இவருடைய 366ஆவது புறநானூற்றுப் பாடலும் காஞ்சித்திணைச் செய்யுளே யாகும்.


3. காப்பியாற்றுக் காப்பியனார்

இவர் காப்பியாறு என்னும் ஊரினர். காப்பியக் குடி யினராகவோ, அல்லது காப்பியன் என்னும் இயற்பெயரினராகவோ இருக்கலாம். தொல்காப்பியர் போன்றோர் இக்குடியைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்களாவர் என்பது வரலாறு. இவரால் பாடப்பெற்றவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆவான்.

இவர் திருமாலின் திருத்துழாய் மாலையினையும், திருமால் வழிபாட்டு மரபையும் அழகொழுகக்கூறியுள்ளார். ஆதலின் இவரைத் திருமால் அன்பர் எனச் சொல்லினும் பொருந்தும். 'வண்டன்' என்பான் இவருக்கு மிகவும் உதவியவொரு வள்ளல் ஆவான். இதனால், இவர் நார்முடிச்சேரலின் சிறப்பைக் கூறும்பொழுதும், ’வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து, வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையை' என்றி கூறியே சிறப்பிக்கின்றார்.

சேரன்மாதேவியைப்பற்றி உரைக்குங் காலத்து, 'விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி' என்று உரைப்பது, அவளது கற்பு மேம்பாட்டையும், இவரது தெய்வ நம்பிக்கைகளையும் காட்டுவதாக அமையும்.

'ஆண்கடன்'; 'புறக்கொடை'; 'துளங்கு குடி'; 'முடந்தை நெல்': 'மல்லல்' உள்ளம்'; 'குருதிச் செம்புனல்'; 'பகைவர் நகைவர்' போன்ற பல அரிய சொல்லாட்சிகளை -