பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

பதிற்றுப்பத்து தெளிவுரை


அந்நாளைய அந்தணரின், 'ஒழுக்கம் உயிரின் மேலதாப் பேணும் உயரிய தன்மையை, அறம் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் என இவர் கூறுவதனால் அறியலாம்.

இவன் மனைவியையும், 'பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இளமுலை, மாண்வரி அல்குல், மலர்ந்த நோக்கின், வேய் புரை பணைத்தோள், காமர் கடவுளும் ஆளும் கற்பின், சேண் நாறு கற்பின் சேயிழை' எனப் போற்றுவர் இவர்.

'அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே’ என்று வாழியாதனை வாழ்த்திய இவர் வாக்கின்படி, அவனும் புகழோடு வாழும் பெருநிலை பெற்று விளங்குகின்றனன்.

வாழியாதனைப் புறநானூற்று 8, 14,ஆம் செய்யுட்களாலும் இவர் போற்றிப் பாடியுள்ளனர்.


7. அரசில் கிழார்

இவர் இயற்பெயர் தெரிந்திலது. 'அரிசில்' என்னும் ஊரினர், வேளாண் குலத்தவர்; பெரும் புலமையும் அரசியறிவும் பெற்றவர் என்பன மட்டுமே நம்மால் அறியக்கூடி யனவாகும். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை இப்பதிற்றுப்பத்தின் எட்டாம்பத்தால் பாடியுள்ளதுடன், குறுந்தொகையின் 193ஆம் செய்யுளையும், புறநானூற்று 146, 230, 281, 300, 304, 342ஆம் செய்யுட்களையும் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரைச் செய்யுட்களிலும் இவர் செய்யுட்கள் காணப்படுகின்றன.

'செந்நெலின்' அளவை உறை குவித்தாங்கு' என இவர் கூறுவதுகொண்டு, மரக்காலுக்கு 'அம்பணம்' என்னும் பெயரும், நெற்குவியலுக்கு ’உறை' என்னும் வழக்கும் வழங்கிவரும் தென்பாண்டி நாட்டவர் இவராகலாம் என்பர். சோணாட்டார் எனவும், மைசூர் நாட்டு அரிசிக்கரை யூரினர் எனவும்; அரியலூரினர் எனவும் பலவாறு கூறுவர்.

’மடங்கடல் தீயின் அனையை, சினங்கெழு குருசில், நின் உடற்றிசினோர்க்கே' எனவும், 'பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி' எனவும், இரும்பொறையுன் படையாண்மைப் பாராட்டுவார் இவர்.