பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமன்னர்கள்

333

'அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும் மணங் கமழ்' மார்பனும் இவனாவான்.

இவன் காலத்து இருந்த மற்றொரு சேரமான். 'கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ யாவான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தை ஒட்டியவன் இவன். ’ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்' எனவும் இவனைக் கபிலர் போற்றுகின்றனர் (புறம் 8). இவனைப் பாடிய மற்றொரு புலவர் குண்டுகண் பாலியாதனார் ஆவர் (புறம் 387). இவன் சிக்கற்பள்ளிப் போரில் உடல் துறந்து, புகழால் நிலைபேறு பெற்றவன்.

’அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே’ என வாழ்த்துவார் கபிலர், இவனை. இவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இவன் தேவி வேளாவிக் கோமான் பதுமனின் மகளும் என்று அறியப்படுகின்றன.


8. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

இவனைப் பாடியவர் அரிசில்கிழார். இவர் பாடிய பாட்டுக்களால் பெரிதும் மகிழ்ந்தானாகிய இவன், தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று, ’கோயிலுள்ளவெல்லாம் கொண்மின்’ என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசு கட்டிலும் கொடுத்துப் பெரும்புகழ் அடைந்தவன்.

இவனது போர்ச்செயல்களுள் சிறப்பானது தகடூர் அதியமானை வென்றது ஆகும். அந்தப் போர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதற்குத் 'தகடூர் யாத்திரை' என்ற தனிநூலின் எழுச்சியே சான்றாகும். முரசுகட்டிலில் அறியாது ஏறிய மோசிரேனாரைத் துயில் எழுந்துணையும் கவரிவீசி நின்று போற்றிப் புகழ்பெற்று, அவரால் பாடப்பெற்றவனும் இவனே யாவான். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பானும் இவனே என்பது ஆன்றோர் முடிபு: அதனை இவனது தமிழ்கனியும் நெஞ்சச் செவ்வி நன்கு காட்டும்.

’இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மையை' நன்கு தெளிந்து, அறமும் மறமும் அறிவும் பண்பும் செறிய வீற்றிருந்து சிறப்புற்றவன் இவன். இவன் பகைவர்க்கு ’மடங்கல் தீயின்’ -