பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

81

அவ் அடைகரைப் பகுதியெல்லாம் உயர்ந்த நெருப்புப் பரவியிருப்பதுபோலத் தோன்றும். அவ்வடைகரைப் பகுதிகளிலே சங்கினம் நாரையோடு செவ்விதான கோடுகளைச் செய்தபடி உலவிக் கொண்டிருக்கும். கழனிகட்கு வாயிலைப் போல அமைந்த, பொய்கையைச் சார்ந்த விளைநிலத்திலே, நெருப்பைப்போல விளங்கும் செந்தாமரை மலர்களும், வளையணிந்த விளையாட்டு மகளிர் பறிக்காதே மலர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கும். இவற்றோடும் நீங்காத புதுவருவாயினை உடையதாகவும், நின்னைப் பகைத்தோரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் காணப்படும்.

இனி, அப்பகைவர் நாடுதான், நின்னைப் பகைத்ததால் அழிந்து பட்டது. நின் வலிமிகுந்த பெரும்புகழை அறியாராய் நின்னோடும் போரிட்டவரான, போரினை எதிரேற்ற பகைவேந்தர், நின் தூசிப்படைக்கே ஆற்றாதாராய்த் தம் நாட்டை யகன்று ஓடிப் போயினர். அதனால் அவர்கள் நாட்டில் போக்குவர்வு புரிவார் யாரும் இலராயினர். அதனால் வழிகள் புல்மிகுந்தவையாய், இருந்த இடம் தெரியாதபடி மறைந்து கெட்டன. அவ்விடங்களின் பண்டைப் பேரழகும் அழிந்தது. அவ்வழிகளிலே, தம் ஏறுகளோடு கூடியவையாய்ப் பெருமையுடைய காட்டுப்பசுக்கள் விருப்போடு இனிதாகத் தங்கியிருந்தன. வானுயரத்திற்கு நிமிர்ந்த மாடங்களையுடைய ஊர்களைக்கொண்ட நாட்டுப்பகுதிகள் எல்லாம் காட்டுப்பகுதிகளாக மாறின. அவற்றையெல்லாம், நின்பாற் பரிசில் பெற விரும்பி வருவோமாகிய யாமும் வழியிடையே கண்டனம், பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : அலந்தலை - அலந்த தலை; உலர்ந்த தலைப்பகுதி. உன்னம் - ஒருவகை மரம். கவடு - கவறுபட்ட கிளைப்பகுதி. சிதடி - சிள்வீடு; கவட்டிடையமர்ந்து மரத்தைத் துளைக்கும் வண்டு; அதுதான் கரைதற்குக் காரணம் மரம் காய்ந்து துளைப்பதற்குக் கடுமையாகத் தோன்றியதனாலாம். வறம் - பஞ்சம். பைது - பசுமை. புலம் - விளைவயல். வாங்குபு - இழுத்து. தகைத்த - கட்டிய. கலப்பை - கலங்கள் பெய்த பை. மன்றம் ஊர்மன்றம். மறுகு - தெரு. சிறை - இருபக்கமும். வயிரிய மாக்கள் - பாணர் கூத்தர் முதலியோர். கடும்பசி - நெடுநாள் நின்ற பெரும்பசி. அது தீர ‘மலிய உண்டு’ என்றனர். மகிழ் - கள்! பேருணவழித்துப் பசிபோக்கியதுடன் பெருங்கலம் வீசிப் பரிசிலும் நல்கினான் என்றனர். இனி, “நாட்கள் உண்டு நாண்

ப-6