பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100


இதுபோன்ற நாடகங்கள் சென்ற நூற்றாண்டில் வெளி வந்துள்ளன. அண்மையில் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரது நாடகங்களும் சென்ற நூற்றாண்டிலேயே நாட்டில் உலவத் தொடங்கிய நிலையையும் அறிகிறாம். அவர்தம் லீலாவதி சுலோசனா நாடகம் 1895இல் அச்சிடப் பெற்றதாகும். அதில் ஆசிரியர் தம் முன்னுரையில்,

தென்னாட்டிற்குரிய தமிழ் இலக்கியமானது இயல் இசை நாடகமென நமது முன்னேரால் மூவகையாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலத்தில் யாது காரணம் பற்றியோ நாடகத் தமிழ் அதிக வழக்கத்தில் இல்லாமை கண்டு சிறியேன் எனது சிற்றறிவைக் கொண்டு ‘லீலாவதி-சுலோசனா அல்லது இரண்டு சகோதரிகள்’ என்னும் ஓர் நவீன நாடகத்தை இயற்றினேன். தற்காலத்திய நிலைமைக்குத் தக்கதாயிருக்கும் வண்ணம் ஆங்கிலேய பாஷையிலுள்ள நாடகங்களின் தன்மை வாய்ந்ததாயும் நம்மவர் எல்லோரும் வாசித்தறியும்படி எளிய நடையாக வசனத்திலும் இந்நாடகம் எழுதப்பட்டிருக்கிறது.

என்று கூறுகின்றார். இவர் நடை மிக எளிதாக எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடியது. இதுபற்றி ஒன்றும் காட்டத் தேவையில்லை.

தமிழில் பாடநூல் எழுதப் பரிசு

பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தையாராகிய விஜயரங்க முதலியாரும் தமிழ் உரை வளர்ச்சிக்கு உதவினார் என்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும். ‘அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்த வரலாறு’ பற்றிய நூல் ஒன்று விஜயரங்க முதலியாரால் 1852இல் எழுதி வெளியிடப் பெற்றுள்ளது. அவர்தம் முன்னுரையில் தம் ஆசிரியர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் எனக் குறிப்பிடுகிறார். இந்நூலும் அவரால் பரிசோதிக்கப்பட்டது எனக் குறிக்கின்றார். அவர் தமது முகவுரையில்,