பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102

இத்தகைய நாடகங்கள், நாவல், சிறுகதைகள் தவிர்த்துச் ‘சரித்திரங்கள்’ எனப்பட்டனவும் சில அச்சிலும் ஏட்டிலும் சென்ற நூற்றாண்டில் உலவி வந்துள்ளன. தேரூர்ந்த சோழன் சரித்திரம், சிவாஜி சரித்திரம், நாசிகேது சரித்திரம் (1880), மதுரைச் சங்கத்தார் சரித்திரம், நாலு மந்திரி சரித்திரம் (1839), டில்லி ராஜாக்கள் சரித்திரம் முதலிய வரலாறு கலந்த கதைகள் உரைநடையில் இடம்பெற்று நாட்டில் வாழ்ந்து வந்தன. அவை இன்றைய சரித்திர நாவல்கள் போன்றனபோலும். இவ்வாறு, பொதுமக்கள் எளிதில் உணர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் பல சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் சென்ற நூற்றாண்டில் தோன்றி மக்கள் அறிவை வளர்த்ததோடு தமிழ் உரை நடை தழைக்கவும் சாதனமாக இருந்தன. பொதுமக்களின் கடிதப்போக்கு வரவு வளர்ந்த காரணத்தால் அத்துறையின் வழியும் உரைநடை வளர்ந்தது என்பதை நாளை காணலாம். இத்துறைகளில் கடந்த பல நூற்றண்டுகளைக்காட்டிலும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை அதிக வளர்ச்சி அடைந்தது எனலாம்.

அரசாங்க வெளியீடுகள்

இனி, அரசாங்கத்தார் தமிழ் உரைநடை வளர்த்த வகையினைக் காண்போம். அரசாங்க விளம்பரங்கள், உத்தரவுகள், பத்திரங்கள், சட்டங்கள், கிராமக் கணக்குகள், வெளியீடுகள் முதலிய பல சென்ற நூற்றாண்டில்–தமிழில்–உரைநடையில் வெளிவந்துள்ளன. அவற்றுள் பல வடசொற்கள் மட்டுமன்றி அரபிய, உருது, பர்சியச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. முகலாய ஆட்சியை ஒட்டி அமைந்த காலமாதலால் அந்த வாடையினை அங்கே காணமுடிகின்றது. அத்தகைய சொற்களுள் சிலவற்றைப் பின் தந்துள்ளேன். அரசாங்க வெளியீடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். அவை பொதுவாகவும் சிறப்பான ஒன்றைப் பற்றியனவுமாக வுள்ளன; விளம்பரம், ‘டெண்டர்’, நலத்துறை, சட்டம், மீன்பண்ணை, காவல்துறை வணிகத்துறை, சாலைத்துறை, ஊராட்சி, நாட்டாட்சி .