பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
118

துள்ளன. சென்னைப் பல்கலைக் கழகத்தார் சென்ற நூற்றாண்டின் இறுதியில் பள்ளி இறுதித் தேர்வுக்கெனப் (Metriculation Examination) பல நூலகள் வெளியிட்டுள்ளளனர். ஆண்டுதோறும் தமிழ்ப்பாட நூல் ஒன்று பாட்டும்உரையும் கலந்து வெளிவந்தது. உரைநடை எழுதியவர்கள் பெயர் காட்டப்பெறவில்லை. கிடைத்த குறிப்புக்களிலிருந்து, அவை அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து-பல்வேறு ஆங்கில நூற்பகுதிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப் பெற்றனவாகி-ஒருவராலேயே மொழிபெயர்க்கப் பெற்று நூலாக்கப் பெற்ற நிலையை அறிய முடிகின்றது. இவ்வாறே பல மொழிபெயர்ப்பு நூல்களும், கட்டுரைகளும் தமிழில் உரைநடை வளர்க்க உதவியுள்ளன.

பாடநூல்களைப் பற்றி எண்ணும்போது அத்துறையிலுள்ள பல்வேறு நூல்களும் நம் நினைவுக்கு வருகின்றன. தமிழ்ப்பாட நூல்கள் மட்டுமன்றி, எல்லாப் பாடங்களையுமே தமிழில் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது அக்காலத்தில் உண்டாயிருந்த பாடத் திட்டங்களின் அமைப்பிலிருந்து உணர்கிறோம். நில நூல், வரலாறு முதலிய பாடங்கள் பற்றிய நூல்கள் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே அமைந்தன. எனவே மொழி பெயர்ப்பு வகையில் கதைகளும் பாடநூல்களும் அமைந்து உரைநடையை வளர்த்தன.

வினவிடை வகையிலும் மக்களுக்கு எளிய வகையில் உயர்ந்த பொருள்களை விளக்கும் சில உரைநடை நூல்கள் சென்ற நூற்றாண்டில் உண்டாயின. அவற்றுள் ஒன்று ‘சாரீர வினவிடை’ என்பது 1866இல் வெளிவந்தது. இந் நூல் சென்னப்பட்டணத்து வைத்திய உத்தியோக வகுப்பைச் சேர்ந்த ம. ஜகந்நாத நாயுடு அவர்களால் இயற்றப்பட்டது. பல உயர்ந்த பொருள்களைப் பற்றி எளிய வகையில் வினாவிடுத்து விடை பெறும் வகையில் இந்நூலும் இதுபோன்ற பிற வி-ைவிடை நூல்களும் பயன் அளித்தமையைக் காண்கின்றாேம். இத்தகைய நூல்களுள் பெரும்பாலானவற்றைத் தமிழாசிரியர்கள் அல்லாத பிற துறைகளில் பணியாற்றியோரே எழுதியிருக்கின்றனர்.