பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சொற்பொழி—௩— (16-2-1965)

முன்னுரை

தமிழ் மொழியில் உரைநடையின் தோற்ற வளர்ச்சி பற்றியும் சென்ற நூற்றாண்டில் அதுவளர இருந்த நாட்டுச் சூழ்நிலை, பிற அமைப்புகள், சாதனங்கள் பற்றியும் முதலில் கண்டோம், அடுத்துப் பொது மக்களிடம் பெரு வழக்காக உள்ளகதை, நாவல், அரசாங்க வெளியீடுகள் முதலியவற்றுள் தமிழ் உரைநடை சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றுள்ளமை அறிந்தோம். இனிச் சமயம், இலக்கியம், இலக்கிய உரைகள், உரை விளக்கங்கள் தத்துவம், இலக்கணம், கடிதம் முதலியவற்றைப் பற்றி ஆய்ந்து அவற்றின் வழியே சென்ற நூற்றாண்டின் உரை நடை வளர்ந்ததைக் காணல் ஏற்புடைத்து எனக் கருதுகின்றேன். அவற்றுள் முதலாவதாகச் சமய இலக்கிய வளர்ச்சியில் உரைநடையின் பங்கினைக் காணலாம்.

சமயங்கள்

தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டே பல்வேறு சமயங்கள் வாழ்ந்து வருகின்றன. சங்க இலக்கிய அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழ்நாட்டுப் பழம் பெருஞ் சமயங்களாகச் சைவம், வைணவம் என்ற இரண்டு மட்டுமே காட்டப்பெறுகின்றன. அவற்றுள் மழுவாள் நெடியோனாகிய சிவனைத் தலைவனாகக் கொண்டே பிற தெய்வங்கள் பேசப் பெறுகின்றன. பின் இவற்றின் கிளைகளாகச் சில சமயங்கள் தோன்றின என்றாலும் அவை அனைத்தும் இவற்றினுள்ளே அடங்கிவிட்டன. தொல்காப்பியர் காலத்தை ஒட்டி-அவருக்குச் சற்று முன்போ பின்போ என ஐயுறும்படி–வடநாட்டில் தோன்றிவளர்ந்த ‘வைதிகம்’ என்னும் வேத அடிப்படையில் தோன்றிய