பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
133

அறிஞரும் ஒருங்கு சேர்ந்து அச்சமயத்தில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளனர்.அவருள் சிலர் தமிழ்மொழி பற்றியும் தமிழ் நாட்டுப் பழஞ்சமயங்கள் பற்றியும்கூட ஆராய்ந்து சிற்சில நூல்களை வெளியிட்டுள்ளனர்.

சைவம்

சைவ சமயம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயம் எனக் கண்டோம். அச்சமயத்தே மிகப் பழங்காலந் தொட்டே பல்வேறு சமய இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தோத்திரங்களாகவும், சாத்திரங்களாகவும், தர்க்க நூல்களாகவும் பல எழுதப் பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே பதினெட்டாம் நூற்றாண்டு முடிவுவரை அச்சிடப் பெற்றன. பெரும்பாலான சென்ற நூற்றாண்டில் அச்சிடப் பெற்றனவே. மேலும் அதுவரை இருந்த சமய நூல்களுள் பெரும்பாலான பாட்டில் அமைய, சென்ற நூற்றண்டில் அத்தகைய பாடல்களுக்கு உரைநடைகளும் உரை விளக்கங்களும் எழுதப் பெற்றதோடு, அவற்றின் அடிப்படையில் புதுப்புது உரைநடை நூல்களும் வெளிவந்துள்ளன. ஆறுமுக நாவலர், சோமசுந்தர நாயகர், சபாபதி முதலியார் முதலிய பெரும் புலவர்கள் சென்ற நூற்றாண்டில் சைவ சமய வளர்ச்சி பற்றியும் இதை எதிர்ப்பாரைச் சாடியும் பல நூல்கள் எழுதியுள்ளனர். வடலூர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார் பல்லாயிரக் கணக்கான பாடல்களோடு நல்ல உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். அன்பர் பலருக்கு அவர் எழுதிய கடிதங்களும் உரைநடைக்குச் சான்று தருகின்றன. சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றண்டின் தொடக்கத்திலும் நூல்கள் இயற்றிய பாம்பன் குமரகுரு தாச சுவாமிகளின் சைவசமயம் பற்றிய விளக்க நூல்கள் எழுதியதோடு, வைணவ சமய நெறி பற்றிய மறுப்பு நூல்களும் எழுதியுள்ளார்கள், (அவை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளி வந்துள்ளன.) இவையேயன்றி, மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய பெரும் புலவர்கள் தமிழ்