பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
134

நாட்டில் 'தலபுராணம்’ எனப்பெறும் புது வகையான இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். அவை பெரும்பாலும் பாடல்களால் ஆனமையின், பொதுமக்கள் அவற்றை எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டுச் சிலர் அத்தல புராணங்களுக்கு வசனங்களும் எழுதினர். பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் முதலிய சென்ற நூற்றாண்டிற்குமுன் தோன்றிய பல பாடல் இலக்கியங்களுக்கு, சென்ற நூற்றாண்டில் அவற்றைப் பொதுமக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளுமாறு, ஆறுமுக நாவலர் முதலிய அறிஞர்களால் நல்ல தெளிந்த இலக்கிய உரைநடை நூல்களும் விளக்கங்களும் எழுதப்பெற்றன. இவ்வாறு பல வகையில் சென்ற நூற்றாண்டில் சைவசமயம் பற்றிய உரைநடை நூல்கள் எண்ணற்று வளர்ச்சியுற்றன. நாம் நேற்றுக் கண்ட 'மெக்கன்சி' சேர்க்கையிலும் இத்தல புராணம் பற்றிய சிறு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். இத்தல புராணங்களை முதலில் பாட்டிலே பாடினர்கள் என்றாலும், கல்லா மாக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு எளிய உரைநடையில் பிறகு எழுதினர்கள். அவற்றுள் கர்னல் ‘மெக்கன்சி’க்கு நேரில் சொல்லிய நடை, நாம் நேற்றுக் கண்ட உரைநடையைப் போன்று கொச்சை நடையாகவே உள்ளது.

திருப்புலிவன மகாத்தியம்

1816 ௵ ஆகஸ்டு ௴ 9 ௳யில் செங்கற்பட்டு ஜில்லாவில் சேர்ந்த புலிவன்னாடு காலூர் கோட்டம் திருப்புலி வனம் தேவஸ்தானம் மடவளாகம் ஸ்ரீஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாகிய வியாக்கிர புலியூர் பரகோவில் முதலான பூர்வீகர் பேர்பெற்ற நாமா அனாதியா யிருக்கிற வியாக்கிர புலியிஸ்வரர் கிறுவிது யுகத்தில் ஆதியில் வில்வவனம் விஸ்தாரமாயிருந்த படியினாலே வில்வதை ஈஸ்பரர் என்று புருண சித்தமாய் பேர் உண்டாச்சுது. திரையோதா யுகத்திலே அகஸ்தி