பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
165

பட்ட நூல்களைப் பல அறிஞர்கள் எழுதி வெளியிட்டனர். யாழ்ப்பாணம், நாகைப்பட்டினம், புதுவை, தரங்கம்பாடி, வேப்பேரி முதலிய பல இடங்களில் தம் சமய நெறிச்கெனவே பல அச்சகங்களை நிறுவி, அவற்றின் வழி எண்ணற்ற நூல்களை வெளியிட்டனர் கிறித்தவ சமயத்தவர். தமிழ் நாட்டில் பெரும்பான்மையாகப் பரவியுள்ள கத்தோலிகர், புரோட்டஸ்டண்டு சமயத்தினர் ஆகிய இருவருமே இத்துறையில் பெரிதும் கருத்திருத்தித் தத்தம் கொள்கைகள் வளரப் பாடுபட்டனர். ஜான் மர்டாக் வெளியீட்டின்படி புரோட்டஸ்டாண்டு பிரிவினரே அதிக நூல்கள் வெளியிட்டுள்ளனர். சில நூல்களில் ஒருவர் கருத்தை மற்றவர் தூற்றியும் உள்ளனர். கொள்கை யடிப்படையில் சமயநெறி பற்றிய ஆய்வு எத்தகையது ஆயினும், அவர் தம் முயற்சியால் தமிழ் உரைநடையில் பல வகையான நூல்கள் வெளிவந்தன எனக் காண்பதே நமது நோக்கமாகும். புதிதாகத் தம் சமய நெறியைப் பரப்ப விரும்பிய கிறித்தவ மக்கள் ஒல்லும் வகையான் செல்லும் வாயெல்லாம் தம் சமய உண்மைகளை விளக்கம் பெறச் செய்தனர். திருக்கோயில்களில் ‘ஐயர்’ ‘குரு’ என்பார் ஆற்ற வேண்டிய நியதி தொடங்கிச் சாதாரண மனிதன் பின்பற்ற வேண்டிய அன்றாட வழிபாட்டு முறை வரையில் உள்ள பல்வேறு நிலைகளுக்கெனப் பலப்பல நூல்கள் இயற்றினர். இந்தியக் கிறித்தவரும் மேலை நாட்டிலிருந்து வந்தவருமாகப் பலர் தமிழ் உரைநடையில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி வெளியிட்டனர். எளிய கல்லா மக்களையும் தம் பக்கம் ஈர்க்க நினைத்தமையால் அவருள் பலர் மிக எளிய நடையில் - சிலர் கொச்சை நடையில்கூட-தம் நூல்களை எழுதினர், ஒரு சில நூல்கள் வேற்று மொழிகளிலிருந்தும் நம் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே இன்று நம்மிடையுள்ளன. எனினும் கிறித்துச் சபையின் நூல் நிலையங்கள் பல இவற்றைப் போற்றிக் காக்கின்றன.

ஞானப் பொக்கிஷம் என்னும் ஒரு நூல் 1878 இல் வெளியாயிற்று, துறவிகளுக்குரிய சிறந்க நெறியை அது