பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
189

என்று கூறித் திருக்குறள் முழுவதையும் தம் மனம் போல் மாற்றி விளக்க உரையும் தந்துள்ளார். நல்லவேளை இது நாட்டில் உலவாது நின்றது.

கடிதங்கள்

இவ்வாறு மேலைநாட்டு அறிஞர்பலர் தமிழ்நாட்டிற்குப் பலவகையில் பணிபுரிய வந்து அவர் தம்பணிகளோடு அன்னைத் தமிழுக்கு ஆக்கப்பணி ஆற்றியவகையில் பல உரைநடை நூல்கள் எழுதி, இன்றும் நம்மொடு கலந்து உறவாடும் வகையில் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தி, இறுதியாக அஞ்சல் துறை வளர்ந்த-சென்ற நூற்றாண்டில் கடிதத்தின் வழி வளர்ந்த தமிழ் உரை நடைபற்றிக் கண்டு அமையலாம் எனக் கருதுகிறேன். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சில அறிஞர் தம் கடிதங்களை அப்படியே ஈண்டுக் கண்டு அமையலாம். இராமலிங்க அடிகளார் கடிதங்கள் முன்னரே கண்டுள்ளோம். கடிதங்களும் இலக்கியமாகப் போற்றக் கூடியனவே; மேலை நாடுகளில் கடித இலக்கியங்கள் சிறந்தனவாக உள்ளன. நம் நாட்டில் அந்த நிலை இல்லை. எனினும் சென்ற நூற்றண்டில் சில அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றமையின் அவைகளுள் ஒரு சிலவற்றை ஈண்டுக்காட்டல் அமைவுடைத்து என எண்ணுகின்றேன்.

பல நூல்களைப் பாரறியச்செய்த பெருமை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயருடையது. அவர்தம் ஆசிரியர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். அவர் தம் நண்பர்களுக்குப்பல கடிதங்கள் எழுதியுள்ளார்; அவருக்கு நண்பர்களும் எழுதியுள்ளனர். அவற்றுள் சில காண்போம். மகாவித்துவான் அவர்களால், 'திருச்சிராப்பள்ளி வரகனேரியிலிருக்கும் கிராம முன்சீப் மகாா-௱௱-ஸ்ரீ பிள்ளையவர்கள் சவரிமுத்துப்பிள்ளையவர்களுக்குக் கொடுக்கப்படுவதாக' எழுதப்பெற்ற கடிதம்.