பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
196


இந்தத் தலைப்பை நான் முதலில் எடுத்துக்கொண்ட போது, இத்துணை விரிந்த அளவில் இதன் எல்லை பெருகும் என எண்ணவில்லை. ஆயினும் ஆராய ஆராய எல்லை விரிந்தது-பரந்தது-மிகப்பெருகிற்று. ‘அறிதோறறியாமை கண்ட' வகையில், இப்போது நான் ஆய்ந்து கூறிய அனைத்தும் ஒரு சிறு துளியே என உணர்கின்றேன். அறிய வேண்டியது கடல்-எல்லையற்றது. நான் கூறியன சில; விட்டன பல.

சென்ற நூற்றாண்டின் இலக்கிய ஆய்வு-அதிலும் உரைநடை ஆய்வு மிகப்பெரிது என உணர்கின்றேன். அதன் எல்லையில் ஒரு மூலையில் நின்று, ஆழ்கடற்கரையில் நின்று அதன் எல்லை கண்டு விட்டவனைப்போன்ற உணர்வினைத் தான் நான் பெற முடிகின்றது. இத்துறையில் விரிந்து ஆய்வு தேவை. பல்கலைக்கழகத்தே ஆாாய்ச்சிப் பட்டம் பெறும் மாணவர் இத்துறையில் ஒவ்வொரு பகுதியை எடுத்து ஆராயத் தொடங்கின் ஆயிரக்கணக்கானவருக்கு இஃது இடம் தரும் என்பது என் கருத்து. இது நாட்டுக்குப் பயன்படக் கூடியதுமாகும்.

ஆழ்கடல் பகுதியில் ஒரு துளி காட்டினேன். இதற்குத் துணை நின்று உதவிய அறிஞர் பலர்-நூலகங்கள் பல-சுவடிகள் பல. சொல்வழி உதவியவர் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இச்சொற்பொழிவு வரிசையினை அமைத்துத் தமிழை வளர்க்க முயற்சி செய்த “கல்கி' நிறுவனத்தார் தொண்டு சிறந்தது. அவர்களுக்கும் என் நன்றி. இவ்வாண்டு இப்பொழிவினை எனக்களித்த பல்கலைக்கழக் ஆட்சியாளர், துணைவேந்தர், பேராசிரியர் ஆகியோருக்கும் மூன்று நாளும் வந்து கேட்டுச் சிறப்புச் செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து அமைகின்றேன்.

வணக்கம்