பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

என்ற சொல்லுக்கு work of the poet’s elevated expression or elevated thought or feelings”[1] என்றும், “The art of expressing in melodious words, the thoughts which are the creation of feeling and imagination”[2] என்றும் உரைகள் எழுதப் பெற்றுள்ளன. எனவே 'உரை' யெனப்படுவது சாதாரண வழக்கத்தில் உள்ளதாகவும் செய்யுள் என்பது பாட்டினையும் இறையனர் களவியல் உரை போன்ற உயர் நடை உரைகளையும் குறித்ததாகவும் கொள்ளல் சாலும் என அமைகின்றேன்.

இனி, உரை நடையை (Prose) இவ்வாறு அகராதிகள் காட்டுவதோடு 'Encyclopaedia Britanicca' என்ற பெரு விளக்க நூல் எவ்வாறு விளக்குகின்றது என்பதையும் ஈண்டுக் காணல் நலம் பயப்பதாகும். அதன் விளக்கம் வருமாறு:-

‘பாட்டுக்கு அமைந்த இலக்கண வரம்பின்றி, மக்களால் எளிமையாக ஒளிவு மறைவு இன்றி எழுதவும் பேசவும் பயன்படும் ஒன்றே உரையாகும். பாட்டிலிருந்து (Poetry) உரைநடையைப் பிரித்துக் காட்டுவது எளிதாயினும் இன்னும் திட்டமாக இரண்டையும் வரையறுக்க இயலாது. ஏனெனில், உயர்ந்த நடையில் பாட்டின் இலக்கணத் தோடு கலவாமல் நல்ல ஓசை நயத்துடன் எழுதும் உரைநடையை 'உரைச் செய்யுள்’ என்று கொள்வதும் உண்டு. எனவே, பாட்டிலிருந்து உரைநடையைப் பிரித்துக் காண்பதைவிட்டு, உரைநடை என்பதை உள்ளவாறு விளக்க முயலலாம். உரைநடை என்பது, இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, பாட்டுக்குள்ள சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசை நயம் உடையதாகி, ஒளிவு மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும் வகையில் நேரிய முறையில், கருத்துக்கும் காரணத்துக்கும் பொருத்தமானதாக — ஒன்றினைப் பற்றியோ ஒருவரைப் பற்றியோ— விளக்கி உரைப்பதாகும்.


  1. Oxford Dictionary, p. 882.
  2. Chambers Dictionary, p. 707.