பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18

‘எனினும், உரை நடை என்பது கட்டுக்கடங்காது பேசும் அல்லது எழுதும் சாதாரண எல்லா வசனங்களையும் கொள்வதாகாது. உரைநடைத் தொடர்கள் இன்மொழியால் நல்ல ஒழுகிசை நடையால், தொடர் நலமுடன், ஓசை யுணர்த்தும் நெறியான் நன்கு வளர்ச்சியுற்ற தெள்ளிய நடையில் தெளிந்து செல்லுவனவாக அமைய வேண்டும். மொழிக்கு இன்றியமையாத பெயர் வினைகளுடன் சேரும் உரிச்சொற்களின் தகுதி அளவறிந்து அவற்றைச் சேர்த்து வழங்கும் முறையும் உரைநடையில் வரையறை செய்யப் பெறல் வேண்டும். தேவையற்ற சிலவற்றை விட்டொழித்தலும் உரைநடைக்கு இன்றியமையாதது. எனவே, உரைநடை யென்பது பாட்டின் விதிகளுக்கு விலக்காய் நின்று, இலக்கிய நலம் கெடாவகையில் மக்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை உலகுக்கு எடுத்துக் காட்டப் பயன்படுவது என்று கொள்ளல் பொருந்தும்’[1].


இக்கூற்றும் நாம் மேலே காட்டிய கருத்தினை நன்கு வலியுறுத்துவதாகும். தமிழ்மொழியில் இத்தகைய உயர்ந்த செம்மொழியின் பாலதாகிய உரைநடையும் சாதாரண மக்கள் பேச்சு வழக்கில் உள்ள உரைநடையும் மிகப் பழங் காலந்தொட்டே வளர்ந்து வாழ்கின்றன என்பது தேற்றம். இப்பேச்சு வரிசையில் நாம் இரண்டு வகை ‘உரை’ நடைகளையும் காணலே பொருத்தமானதாகும்.


இனி, இத்தகைய நலம் வாய்ந்த உரைநடை இருக்க, பாட்டு ஏன் எழுந்தது? இவ்வுரை நடைக்கு இலக்கணம் ஏன் இல்லை? இவற்றிற்கு விடை கண்டு மேலே செல்லலாம். சாதாரண எளிய மக்கள் தத்தம் கருத்தைப் பரிமாறிக் கொள்ளப் பயன்பெற்ற உரைநடை இருக்கப் பாட்டு ஏன் எழுந்தது? அறிவு வளர வளர, உள்ள உணர்வும் கற்பனைத் திறனும் மிக்கு ஓங்கப் பாட்டு உருவாயிற்று. தாம் உள்ளத்துக் கொண்ட கருத்தோடு கற்பனைத் திறன் கலக்க, அவை உருப்பெற, சொல்லடுக்குகளும் அணி நலன்களும்


  1. Encyclopaedia Britanicca, vol. 18, pp. 591-592.