பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

தேவனார் பாரதமும், தகடூர் யாத்திரையும் முதலியன என்று தொல்காப்பிய உரையாசிரியர்களால் காட்டப் பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என உணர முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களுள் சில உரை நடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்து செல்வதையும் காண முடிகின்றது. கடைச் சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயே நம்மால் உரைநடையைத் தெளிவாகக் காண முடிகிறது. இதனாலேயே தொல்காப்பியச் சூத்திரத்துக்கு (செய். 238) உரை காண வந்த நச்சினர்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

சிலம்பில்

தொல்காப்பியர் காலங்கடந்து, சிலப்பதிகாரக் காலத்தில் நம்மால் தெளிந்த உரைநடையைக் காணமுடிகின்றது அல்லவா? அச்சிலப்பதிகாரக் காலத்தைக் கி. பி. இரண்டாவது நூற்றாண்டு எனக் கணக்கிட்டுள்ளனர் அறிஞர். எனவே அந்த நூற்றாண்டு தொடங்கிச் சென்ற நூற்றாண்டின் தலைவாயில் வரையில் வந்தோமானல் தமிழ் உரை நடை வளர்ச்சியை ஒருவாறு உணர்ந்தோமாவோம். சிலப்பதிகாரத்திற்கே 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்ற பெயர் உள்ளதை மேலே கண்டோம். சிலப்பதிகாரத்தே தொடர்ந்து உரைநடையைக் காண இயலாது என்பதை இக்குறிப்பே உணர்த்தும். எனினும், அதில் தெளிந்த உரைநடை இருப்பதை இடையிடையே காண்கிறோமே. 'உரை பெறு கட்டுரை.' 'உரைப் பாட்டு மடை' என்ற வகையில் சிலம்புக்கு இடையிடையே உரை தன் ஒலியை எழுப்பி நம்மையும் எழச் செய்கிறது அல்லவா? இந்தச் சிலம்பின் உரைநடையைக் காணும் போதுதான் அதன் ஏற்றமும் நமக்கு நன்கு விளங்குகின்றது. இன்று சிலர் சாதாரணப் பேச்சு வழக்கில் நம் வழக்கத்தில் உள்ளவாறே எழுதுவது தான் உரைநடை என்று வாதித்து நின்றதைக் கண்டோம். அந்தப் பேச்சு