பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44

குடங்கையினேந்திய தீயின் சூட்டினை நிகழ வொட்டாது தனக்கு மாறாகிய மந்திர முச்சரிக்குங்காறுந் தடுத்து நிற்குங் குளிகை போல, அம்முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் அவனது பெருங்கருணை உயிர் கண் மாட்டு ஒருங்கே நிகழாத வண்ணம் தடுத்து நிற்கும் உயிர்க் குற்றமாகிய அவ்வம் மல சக்தியின் வழி நின்று அவற்றை நடத்துவதாகிய அவனது சங்கற்பமே யன்றிப் பிறிதில்லையென்பது பெறப்படுதலின், அங்ஙனம் நடத்துவதாகிய முதல்வனது சங்கற்பமே ஈண்டு மறைப்பெனப்படும் (பாடியம், இரண்டாம் சூத்திர உரை, பக். 126)

நாட்குறிப்பு நடை

இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொட்டுப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழ் உரை வளர்ந்து வந்தது. இனிப் பத்தொன்பதாம் நூற்றண்டில் உரைநடை வளர்ந்த வரலாற்றைக் காணல் நன்றே. இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதுவரை வளராத அளவுக்குத் தமிழ் உரை நடை வளர்ந்துள்ளது. அது எவ்வெவ்வகையில் எவ்வெத்துறையில் எவ்வெவ்வாறு வளர்ந்துள்ளதென்பதைத் தொடர்ந்து இரு நாட்களிலும் காண இருக்கின்றோம். இங்கு அவ்வாறு உரைநடைமிக்கு வளரக் காரணமாயிருந்த நாட்டுச் சூழ்நிலை, அரசியல், சமயநிலை, பொருள் நிலை, பிறநிலைகளின் வேறுபாடு முதலியவற்றைச் சற்றே எண்ணிப் பார்க்கலாம். அவையே நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கும் பிற உணர்வுகளுக்கும் காரணங்களாக அமைகின்றமையின் அவற்றை எண்ணல் இன்றியமையாததாகும். அதற்குமுன் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலை நாட்டார் இங்கு நிலைபெற்ற காலத்து நாட்டில் சிலர் மேற்கொண்ட ‘நாட்குறிப்பு’ எழுதும் பழக்கத்தையும் எண்ணல் சாலும்; அவர்களும் உரைநடை வளர்த்தவர்களாதலின். அவ்வாறு குறிப்பு எழுதியவர்களுள் சிறந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள். அவர் நாட்குறிப்பிலிருந்து ஓரிரு பக்கங்கள் இவை: