பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56

அச்சுப்பொறி

மொழியின் அடிப்படைக்கு ஆதாரமான மற்றென்றை ஈண்டு எண்ணலாம். இந்த ஆய்வுக்குரிய நூற்றண்டில் மொழி வளர்ச்சியை அளவில் அதிகமாக வளர்த்த பெருமை அச்சுப் பொறிக்கும் உண்டு. மேலை நாட்டிலிருந்து கிறித்துவ சமயம் வளர்க்க வந்தவர்கள் தம் சமயம் வளர்க்க வேண்டி நூல்கள் அச்சிட, சில அச்சுச்சாலைகளை முன்னரே அமைத்தனர் என்றாலும் இந்த நூற்றாண்டில் அது பெருகிற்று. இந்தியாவிலேயே முதல் முதல் அச்சான நூல் தமிழ் நூலே (6–9–1556 இல் முதல் முதல் கோவாவில் அச்சகம் அமைக்கப்பெற்றது). 1578 ஆம் ஆண்டிலே இந்தியாவிலேயே கொல்லத்தில் செய்யப்பட்ட எழுத்துக்களைக்கொண்டு (Indian Type of Malabar letters) ஓரு நூலை மேலைக் கடற்கரையில் (அம்பலக்காடு) அச்சிட்டனர் (அக்காலத்தில் மேலை நாட்டினர் தமிழ் நாட்டை ‘மலபார்’ என்றும் தமிழை ‘மலபார் மொழி’ என்றும் அழைத்தனர்). அந்த முதல் நூல் கத்தோலிக்கர் நூலாகிய ‘தம்பிரான் வணக்கம்’[1] என்பதாகும். அதன் பிரதி ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஹார்வர்டு[2] பல்கலைக் கழகத்தில் உள்ளதாம். பின் 1586 இல் வேறுசில நூல்கள் அச்சாயின. நகரங்களிலும் சென்னையில்தான் 1711 இல் முதல் முதல் அச்சகம் உண்டாயிற்று. (கல்கத்தாவில் 1779 இல் உண்டாயிற்று.) 16ஆம் நூற்றாண்டில் பதின் மூன்று உரைநடை நூல்களும் 17 ஆம் நூற்றாண்டில் 21 உரைநடை நூல்களும் ஆகியவை, தமிழ்க் கத்தோலிக்க நூல்களாக வெளியாயின எனக் கணக்கிட்டுள்ளனர். தரங்கம்பாடி[3], யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும் சென்னையிலும் கிறித்துவ சமய நூல்கள் சென்ற நூற்றாண்டில் பல அச்சாயின. தரங்கம் பாடியில் சீகன் பால்கு ஜயர் (1683-1719) நல்ல நூல்களை அச்சிட்டனர். 3–1–1714 இல் புதிய ஏற்பாடு அச்சிடப்பெற்றது.


  1. டெளட்ரினா சிஸ்டா (Dowtrian Christa கிறிஸ்தியானி வணக்கம்)
  2. Harvard. 3. வணக்கம்—புதிய பதிப்பு—1963, முன்னுரை
  3. By Danish Mission in 25-6-1683.