பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63

கம் இன்னபிறவற்றை உலகுக்கு உணர்த்துகின்றன. எனவே, இவற்றைப் ‘பொதுமக்கள் உரைநடை’ அல்லது 'பொதுமக்கள் இலக்கியம்’ என பகுத்துக் காணல் சாலப்பொருத்தமானதாகும். மக்கள் வாழ்க்கை முறையில் எத்தனை எத்தனை பிரிவுகளுண்டோ-அவர்தம் சூழல் எத்தனைக் கெத்தனை மாறுபடுகின்றதோ-அத்தனைக்கத்தனை வகையில் அவர்தம் பேச்சும் வழக்கும்-சாதாரண எழுத்து வழக்கும் மாற்றம் பெறுகின்றன. அவற்றை ஆங்கில முறைப்படி ‘கொச்சை மொழி’ என்றாலும் அம்மொழியே நாட்டுப் பெறும்பான்மையான மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றமையின் அது பற்றிய ஆய்வு இன்றியமையாததாகின்றது. இன்று மொழித்துறையை ஆராய்கின்ற உலக அறிஞர்கள் பலரும் இத்தகைய மக்கள் மொழியாகிய கொச்சைமொழியை ஆராய்ந்து உணர்த்தும் நெறியிலேயே பாடுபடுகின்றனர் என்பதும் கண்கூடு.எனவே இன்று நாம் பொதுமக்களிடையே கருத்துப் பரிமாற்றத்துக்காகவும்: விளக்கம், விளம்பரம் முதலியவற்றிற்காகவும், வேடிக்கை பொழுதுபோக்கு முதலியவற்றிற்காகவும் வழங்கப் பெற்ற உரைநடை வகைகளையும் கதை, நாவல். நாடகம் முதலியவற்றையும் ஆராயலாம் எனக் கருதுகிறேன்.

மெக்கன்சி துறையின் பணி

பொது மக்களோடு தொடர்பு கொண்டு அவர் தம் மொழி நலத்தையும் பிற வாழ்வியல்புகளையும் ஆராய்ந்த அறிஞர் பலர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையை ஆராய்ந்த அதே வேளையில் அவர் தம் இலக்கிய வளனையும் வழக்கு மொழியையும் ஆராய்ந்த மேலை நாட்டவர் நாட்டில் பலர் இருந்தனர். அவருள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்து, சிறந்த பணியாற்றி திகழ்ந்த-தம் ஊதியப் பணியையும் தமிழ் உணர்வுப் பணியையும் திறம்படச் செய்த-லெப்டினண்ட் கர்னல்