பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

எத்தகைய மாறுதல் அடைந்தது, எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதையெல்லாம் ஆரய்ந்து பல நூல்கள் அம் மொழியில் எழுதப்பெற்றுள்ளன. ஆங்கில மொழி அறிஞர்கள் இந்தத்துறையில் எடுத்துக் கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் ஆகும். அதேபோல் தமிழ்மொழியிலும் இத்தகைய நூல்கள் எழுதப் பெறவேண்டும் என்ற எண்ணம் சிறிது காலத்துக்கு முன்புதான் நம் நாட்டில் தோன்றியது. கால அளவு சிறிதாயினும், அந்தத்துறையில் இப்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பெருமைப் படத்தக்க ஒன்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் ஏற்பட்ட உரைநடையின் வளர்ச்சி பற்றிய இலக்கிய வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது. தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ அ. மு. பரமசிவானந்தம் தெளிந்த ஆராய்ச்சியோடும் தீர்க்கமான சிந்தனையோடும் பல நுட்பமான விஷயங்களை இதில் தந்திருக்கிறர். ஒரு வடிவம் பெற்ற உரைநடை யென்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் தமிழ் மொழியில் தோன்றத் தொடங்கியது. இருப்பினும் இன்று அது மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் ஆரம்பம் பத்தொன்பதாம்நூற்றாண்டிலேயே மலரத் தொடங்கியது. இதை, பல கட்டுரைகள், பெரியோர் எழுதிய கடிதங்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகாகச் சித்திரிக்கிறார் ஆசிரியர்.

இலக்கிய வரலாறுகளை எழுதும் புதிய முயற்சியில் இந் நூல் ஒரு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சாதனை. இதற்காக ஸ்ரீ அ. மு. பரமசிவானந்தம் அவர்களைப் பாராட்டுகிறேன் இதேபோல் இவர் இன்னும் பல ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தரவேண்டும்.

மொழி ஆர்வம் மிகுந்து வரும் இந்நாளில் மக்கள் இத்தகைய நூல்களுக்கு நல்ல வரவேற்புத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பக்தவத்ஸலம்
24—2—66