பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
93

வசனம் மிகவும் கடின நடையுடையது. அம்மாதிரியான கடின வசனம் பெரும்பாலார்க்குப் பயன் படாது. “விளங்க வைத்தல்” என்பதைக் கொண்டு வசனம் எழுத வேண்டும். கவியானது கடினமாயிருந்தாலும் குற்றமில்லை. வசனம் கடினமாயிருந்தால் பெரும் பயன் அளியாது. ஆதலின் எளிய நடையில் எழுதுவதுதான் உசிதம். ஸ்ரீமான் வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீமான் செல்வக் கேசவராய முதலியார் ஆகிய வித்துவான்கள் எழுதிய வசனந்தான் நமக்கு வழிகாட்டக் கூடியது. அவர்களுடைய வசன நடை மிகவும் பாராட்டற்பாலது. ஏனெனில், எளிய நடையில் எழுதுவது கடின நடையில் எழுதுவதைப் பார்க்கிலும் வருத்தமான காரியம்.

(ராமதாஸ் என்னும் புதிய கட்டுக் கதை—முன்னுரை, 1908)

இவ்வாறு இன்னும் பலரும் சென்ற நூற்றாண்டின் நாவல் பற்றியும் உரைநடை பற்றியும் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். ருபின்சன் குருசோ (1869), தசகுமார சரித்திரம், பிரேம கலாவதியம் முதலிய மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘தீனதயாளு’ முதலிய நாவல்களும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வந்தன. கிருபை சத்தியநாதன் என்ற கிறுத்துவ அம்மையாரும் இரு நாவல்கள் எழுதியுள்ளார். ஒன்று கிறித்தவ சமயச் சார்பானது; மற்றது இந்து சமயச் சார்பானது. ‘விநோத சரித்திரம்’ என்று உயர்ந்த இலக்கிய நடையில் நாராயணசாமிப் பிள்ளை என்பார் நாவல் எழுதியுள்ளார் எனவும் அறிகிறோம். இராஜம் ஐயர் அவர்கள் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாடறிந்த ஒன்று. 1875 முதல் 25 ஆண்டுகளில் சுமார் 50 நாவல்கள் வந்துள்ளன. சில இதழ்களும் பல்வேறு தொடர்கதைகளைச் சிறுகச் சிறுக வெளியிட்டு வந்தன. இவ்வாறு சிறுகதையும் நாவலும் தாமும் வளர்ந்து தமிழ் உரைநடை வளரவும் உதவின. மக்களும் ஓரளவு அறிவு விளக்கம் பெற்றனர்.