பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணும் உடுக்களும்

  விரிந்து பரந்தவிந்த 

மண்ணும் விலங்கும்

  மறைந்து கரைந்துருகி 

ஆவி நிலையாகி

   அன்புப் பெருவெளியாய் மேவி யிருக்க
  இருவரையும் வெடுக்கென்று 

தாவிப் பறித்ததோன் கை!


வெடிக்காத தென்னையிளம் பாளை போன்ற

  வீரவாள் மீதிலொரு கையும், துள்ளித் 

துடிக்கின்ற மீசைவாள் மீதோர் கையும்

  தொட்டவண்ணம் நின்றிருந்தான் சோழன், கையை 

நொடித்தவுடன் அடுப்புக்கண் கொலைஞர் பாய்ந்தார்.

  நுதல்வியர்த்த இளங்கவியைப் பருந்து பற்றி 

அடித்துக்கொண் டோடுவது போலச் சென்றார்,

  ஆணிமுத்தைப் பெட்டகத்துள் அடைத்து வைத்தார்.

"இனிமேலென் வானத்தைக் கவிதை பாடும்

  இளையநிலா அளக்காது; சிதைந்த என்றன் 

பனிமலரில் வீணைவண்டு சுற்றி வந்து

  பாட்டரங்கம் கடத்தாது; மூக்கு மூச்சும் 

இனியெனக்குச் சீறுகின்ற பாம்பே! ஒட்டி

  இருக்கின்ற உயிருடலும் தீயும் பஞ்சும்! 

தனிமையிலே எனக்கேது வாழ்க்கை !" என்று

  தரைமீனாய்த் துடித்தழுதாள் தஞ்சைத் தையல்.

_____________________________ பனித்துளிகள் 42 _____________________________