பக்கம்:பனித்துளி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பனித்துளி

 விட்டாளோ இன்றைக்கும்? அப்படியானாம் கதவைச் சாத்திக்கொண்டு ஜாக்கிரதையாக இரு, அம்மா!” என்று கூறிவிட்டுத் தம் பழைய குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

அப்பாவை வாசல் வரையில் வழி அனுப்பி விட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டாள் காமு. பகல் வேளையானதால் தெரு நிசப்தமாக இருந்தது. வீட்டில் வேலையெல்லாம் முடிந்து விட்டது. காமுவுக்குப் பொழுது போகவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் வஞ்சல் சங்கிலியில் சாய்ந்து கொண்டு, “யாரோ! இவர் யாரோ!” என்று அவளுக்குத் தெரிந்த அரைகுறைப் பாட்டைச் சற்று இரைந்து பாடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது வாசல் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. காமு எழுந்து பார்ப்பதற்குள், வாயிற்படி அருகில் அவளுக்குப் புதிதாகத் தோன்றிய இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனை அவள் அதுவரையில் பொன்மணியில் பார்த்ததில்லை.

“ராமபத்திரய்யர் வீடு இதுதானா? அவர் வீட்டில் இருக்கிறாரா?” என்று இளைஞன் விசாரித்தான்.

காமு சிறிது தயங்கினாள். பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு, அப்பா டவுனுக்குப் ‘பென்ஷன்’ வாங்கப் போயிருக்கிறார். இன்னும் ஒரு மணியில் திரும்பி விடுவார்” என்று கூறினாள்.

“அப்படியானால் நடேச சர்மாவின் பிள்ளை சங்கரன் வந்திருந்ததாகச் சொல்லுங்கள் முடிந்தால் சாயங்காலம் வருவதாகவும் சொல்லுங்கள்” என்றான் வாலிபன்.

அப்பா வந்து விடுவார். இருந்து பார்த்து விட்டுப் போகலாமே! என்று சொன்னாள் காமு.

“இல்லை. முக்கியமான அலுவலாக ராஜம்பேட்டைக்குப் போக வேண்டும். சாயங்காலம் வருகிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/10&oldid=1156055" இலிருந்து மீள்விக்கப்பட்டது