பக்கம்:பனித்துளி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 173

வந்து சொன்னார்கள். ஊரைச் சுற்றத்தெரிகிறதே, இங்கே வருவதற்குத் தெரியவில்லையா அவளுக்கு பணத்திமிர் அப்படியெல்லாம் ஆடச் சொல்லுகிறது” என்று பிள்ளை யிடம் புகார் செய்தாள் தாயார்.

சங்கரன் எதையுமே காதில் போட்டுக் கொள்கிற தில்லை. நீலா இருந்த வீடும், இல்லாத வீடும் ஒன்றாகத் தான் இருந்தது அவனுக்கு. மனைவி வீட்டில் இருக்கிறாளே, கொஞ்சம் முன்னாடிப் போகலாம் வீட்டுக்கு என்று நினைத்து முன்பு சீக்கிரம் வருவான். இப்பொழுது அவன் நினைத்த போது வீட்டுக்கு வருவது, சாப்பிடுவது என்று ஆகிவிட்டது. கல்யாணம் நடந்து நீலாவுடன் வாழ்க்கை நடத்தியதே சொற்ப காலம். அதுவும் சண்டையும் பூசலுமாகக் கழிந்து விட்டது. கல்யாணம் நடந்ததே ஒரு கனவு போல் தோன்றியது அவனுக்கு.

இந்தச் சமயத்தில் தான் நீலாவுக்கு வளைகாப்புக்கு முகூர்த்தம் வைத்துக் கொண்டார்கள். ஊரெல்லாம் அழைத்து வெகு அமர்க்களமாகச் செய்தார்கள் அவர்கள். எல்லோருக்கும் அனுப்பிய அழைப்பிதழைச் சம்பந்தி களுக்கும் அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார்கள் நீலாவின் பெற்றோர்.

வளைகாப்பு முகூர்த்தத்தன்று காலை வரையில் ருக்மிணியும், மீனாட்சி அம்மாளும் யாராவது அழைக்க வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் வரவில்லை. பதினோரு மணிக்குமேல் நீலா மட்டும் வளை அடுக்கிக் கொண்டு காரில் புக்ககம் வந்தாள். வாசலில் உட்கார்ந்திருந்த மாமனாருக்கு நமஸ்காரம் செய்தாள். உள்ளே வந்ததும் நாத்தனாரும், மாமியாரும் உட்கார்ந் திருந்தார்கள் மாட்டுப் பெண் வந்ததும் விசுக்கென்று மீனாட்சி அம்மாள் எழுந்து நின்றாள். ருக்மிணி முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் காட்டி விட்டுப் போய் விட்டாள். எனக்கு ஒன்றும் நமஸ்காரம் பண்ண வேண்டாம் என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/175&oldid=682277" இலிருந்து மீள்விக்கப்பட்டது