பக்கம்:பனித்துளி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பனித்துளி


அய்யரும் ஒருவர். வறுமையிலும் கஷ்டத்திலும் உழலும் அவர், மனச் சாந்தியை வேண்டியே பகவத் பஜனையில் ஈடுபட்டார் என்று சொன்னாலும் பொருந்தும். பஜனை கோஷ்டி பெருமாள் கோவிலை மறுபடி அடைந்ததும் அங்கு அர்ச்சகர் தயாராக வெண்பொங்கலும், மிளகுப் பொங்கலும் கமகமவென்று மணக்க வைத்துக்கொண்டு காத்திருந்தார். பனிக் காற்றில் ஊரைச் சுற்றி வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பிரசாதத்தைப் பார்த்ததும் நாக்கில் தண்ணீர் ஊறியது. “ஓய்! சாமாவய்யரே! கொஞ்சம் பின்னாடி நகருங்காணும்” என்று சொல்லிக் கொண்டே தேசிகர் முன்னாடி வந்து தம் இரு கைகளை நீட்டி, ஆவலுடன் பொங்கலை வாங்கிச் சுவைத்தார்.

“இந்தாரும், ஸ்வாமி! உமக்கு இன்னும் கொஞ்சம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளும்” என்று ராம பத்திரய்யர் மிளகுப் பொங்கலை தேசிகரிடம் நீட்டினார்.

“அடாடா ! பெருமாள் கோவில் பிரசாதம்னா தேவாமிர்தம், சார்! எப்படி பாகம் செய்திருந்தாலும் அதற்கென்றே தனி மணமும், ருசியும் ஏற்பட்டு விடுகிறது பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே சுப்பாமணி அந்த அமிர்தத்தை மேலும் ரசித்துச் சாப்பிட்டார்.

ஆமாம், ராமபத்திரா இந்த வருஷமாவது உன் பெண்ணுக்கு எங்கேயாவது ஒரு இடம் குதிருமா? வயசு ஏகப்பட்டது ஆதிறதே?” என்று சுப்பாமணி பொங்கலைக் குதப்பிக் கொண்டே கேட்டார்.

ராமபத்திரய்யர் கலக்கத்துடன் மூல ஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் தாயாரையும், பெருமாளையும் பார்த்து விட்டு, “என்னைக் கேட்கிறாயே, சுப்பாமணி! அதோ பேசாமல என்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி வேடிக்கை பார்க்கும் பெருமாளைக் கேளேன் இந்த விஷயம் நமக்குப் புரியாத விஷயமாக அல்லவா இருக்கிறது?” என்றார்.

“தெய்வம் வந்து உன்னோடு நேரில் பேச வேண்டும் என்கிறாயா? போடா பைத்தியக்காரா!” என்று கூறிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/8&oldid=1156051" இலிருந்து மீள்விக்கப்பட்டது