பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

பன்னிரு திருமுறை வரலாறு


க. கருவூர்த்தேவர்

கருவூர்த்தேவர் பாடியனவாகத் திருவிசைப்பாவில் பத்துத் திருப்பதிகங்கள் காணப்படுகின்றன. அவை தில்லைச்சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேச்சரம். திருக்கீழ்க்கோட்டுர் மணியம்பலம், திருமுகத்தலை, திரை லோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சரம், திருப் பூவனம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருது என்னும் திருத்தலங்களிற் கோயில் கொண்டருளிய சிவபெருமானைப் பரவிப்போற்றியனவாக அமைந்துள்ளன. இத்திருப்பதிகங்களிற் காணப்படும் குறிப்புக்களைக் கொண்டு இவற்றைப் பாடியருளிய கருவூர்த்தேவரது வரலாற்றையும் ஒரளவு உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாசிரியர் தாம் பாடிய பதிகங்களின் இறுதியில் உள்ள திருக்கடைக் காப்புச் செய்யுட்களில் கருவூரன் என்றும், கருவூரனேன் என்றும், கருவூர் என்றும் தம்மைக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பினுல் இவர் கருவூரிற் பிறந்து வளர்ந்தவரென்பதும் கருவூருடன் நெருங்கிய தொடர்புடைமையால் கருவூரன் என அழைக்கப்பெற்ரு ரென்பதும் நன்கு விளங்கும். கருவூரென்பது கொங்கு நாட்டுச் சிவதலங்களுள் ஒன்று. இவ்வூரிலுள்ள திருக் கோயில் திருவானிலையென வழங்கப்பெறும். இக்கோயிலி னுள்ளே தென்மேற்குத் திசையில் கருவூர்த்தேவருக்குரிய கோயில் அமைந்துளது.

கருவூர்த் தேவர் வேதியர் குலத்தில் பிறந்தவர் ; வேதங்களை முறைப்படி யோதி வைதிக நெறியில் வழுவா தொழுகிய பெரியார். இச் செய்தி ஆரணம் பிதற்றும் பித்தனேன் ' என்றும் செழுமறை தெரியுங் திகழ் கருவூரனேன் ' என்றும் கருவூர் ஆசனம் பொழிந்த பவளவாய் ' என்றும் இவ்வாசிரியர் தம்மைப்பற்றிக் கூறுங் குறிப்புக்களால் இனிது விளங்கும். இவர் மக்களுக்கு நலந்தருவனவாகிய கலைகள் பலவற்றையும் நன்கு பயின்றவர். நலமலி கலைபயில் கருவூர் எனவும் காட்டிய பொருட்கலை பயில்கருவூரன் எனவும் வரும் தொடர்களால் இச்செய்தி புலளுகின்றது.