பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வைத்திருக்கிறது என்று வாயாரக் கூறி பெருமை பொங்க பாராட்டுகிறார். மேலை நாடுகளுக்கு முன்னோடியாக நம் நாடு இருக்கிறது என்ற பெருமை பெற வாழும் நாம், அதன் பயனைத் துய்ப்பதற்காகவாவது முயல வேண்டாமா! யோகத்தின் பெருமையை உணர்ந்து கொண்டு, அக்காலத்தில் தோன்றிய மதங்கள் அனைத்தும் - அதாவது ஜைன மதம், புத்த மதம், போன்ற மதங்கள், தங்களுக்கு வேண்டிய யோக முறைக்கு உகந்தப் பயிற்சிகளை எல்லாம் தங்களுக்கு வேண்டிய முறையிலே, விரும்பிப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், ஜைன யோகம் புத்த யோகம், வேதாந்த யோகம் என்றெல்லாம் யோக வகைகள் ஏற்பட்டன. ஆகவே, நமக்குப் புரிந்த உண்மையானது, உடல் நலம் என்பது சிறந்த உயிர் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டற்பாலது என்பதுதான். அதை அறிந்திருந்தும் இத்தனைக் காலம் சும்மாயிருந்து ஏமாந்துபோய் வாழ்ந்திருந்தாலும், இனிமேலாவது சரியான முறையைப் பின்பற்றிச் செல்வது தானே அறிவுடையோர்க்கு அழகு! பிறந்த பயன் ஒருவனது சிறந்த பிறப்புரிமை என்பது உடல் நலத்தோடு வாழ்வதுதான். உடன் வரும் நோய்க் கூட்டத்தின் சத்திரமாக வாழ்வது அல்ல. வலிமையோடு வாழ வேண்டும். வலிமையின்றி வாழ்ந்து, வாழ்வில் என்ன சாதிக்க முடியும்? திறமையோடு வாழ வேண்டும். துணிவோடு முன்னேற வேண்டும்; இன்பம், அமைதி, புலன் சிறக்கும் அறிவுப் பேராண்மையுடன் வாழவேண்டும். சோம்பேறியாக அஞ்சி நடுங்கி, அவல வாழ்க்கையை அறியாமையுடன் வாழ்வதால் என்ன பயன்? யாருக்கு லாபம்?


- _.