பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 19 சிறந்த உடல் நலத்தை யாரும் பணம் கொடுத்து வாங்கிவிடமுடியாது. பணம் கொடுத்து மருந்தை வாங்கலாம். ஆனால் நல்ல உடல், ஆரோக்கியத்தை அடையவே முடியாது. நோயுடன் வாழ்வது பாபமாகும். மாபெரும் குற்றமாகும். அறியாமையாலும், கவனக் குறைவாலும், சுகாதாரமற்ற வாழ்க்கை முறையாலும் உடலை வதைத்து நோய் வரும் அளவுக்குத் தீய வழிகளை மேற்கொள்பவர்களை பாவிகள் என்றே மதங்கள் கூறுகின்றன. ஆகவே மக்களைப் பாவிகளாக்காமல், மனிதர்களாக மாற்ற, தேகத்தின் உள்ளும் புறமும் தூய்மைப் படுத்திக் கொள்ளும் அரிய வழிகளைத்தான் யோக முறைப் பயிற்சிகள் கூறுகின்றன. யோகாசனப் பயிற்சிகளை உடலுக்காக செய்தல், மனக் கட்டுப்பாட்டுக்காக செய்தல் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம் உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை வலிமையாக்கி, சுரப்பிகளின் சக்தியை பெருக்கி, உடலை இரும்பு நிகர் தன்மையில் வடிவமைக்கும் முயற்சி ஒன்று. இது முற்றிலும் உடலைச் சார்ந்த ஆசனப் பயிற்சிகளாகும். நம் மனதை கட்டுப்படுத்தி, அதன் மூலமாக வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களால், மனதை அலைபாயவிடாமல் நிதானமாக நிர்மலமாக்கி உதவுகின்ற மனம் சார்ந்த ஆசனப் பயிற்சிகள் இரண்டாவது வகையாகும். நோயுற்ற, உடலால் நலிந்த மனிதர்களே அதிகமான கவலைக்கும் துன்பத்திற்கும் ஆளாகின்றார்கள். அவர்களை மனிதர்களாக்க, நோயற்ற வாழ்வு வாழச் செய்யவே யோகாசனங்கள் உதவுகின்றன.