பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பற்றாகுறைப் பொருளாதாரம் --தேவைக்கேற்ப ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து மத்திய அரசாங்கம் புழக்கத்தில் விடும் பழக்கம்-- ஒவ்வொரு மாநிலத்தையும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பிற்குக் கொண்டு சென்றுவிட்ட நேரத்தில்,

செம்மையாக நிதி வசதிகளை --வரி வருவாய் வகைகளை நிர்வகித்த மாநிலம் என்று பெயர் பெற்ற தமிழகம் கடன் சுமையால் மென்னி இருகிற அளவிற்கு சுமை ஏறி இருந்த காலத்தில்,

ரிசர்வ் பாங்கிலிருந்து அதிகப்பற்று வசதி பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தும், அதை விட்டகுறை, தொட்டகுறை என்று எப்போதாவது பயன்படுத்திக் கொண்டு வந்த தமிழகம், தொடர்ந்து அதிகப் பற்றையே நம்பிக் கொண்டிருக்க வேண்டிய பரிதாப நிலைக்கு வந்த நேரத்தில்,

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று நிதி நிலையைச் சீர் செய்து, படி அரிசித் திட்டத்தையும் அமுல்படுத்தி, துண்டுவிழும் தொகையைச் சரிக்கட்ட என்ன செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்தித்து,

உலகின் பல பெரும் நாடுகளிலும். மற்ற மாநிலங்களிலும், நடத்தப்படும் பரிசுச் சீட்டுத் திட்டத்தை (லாட்டரியை) ஆரம்பிக்கலாம் என்ற முடிவிற்கு வந்து, ஓராண்டில் மூன்று அல்லது நான்கு முறை லாட்டரி நடத்தினால், பற்றாக்குறையைச் சரிக்கட்டி, உபரியும் காட்டலாம் என 1987-68ம் ஆண்டிற்கான உபரி பட்ஜெட்டை (வரவு-செலவுத் திட்டத்தை) தயாரித்தளித்தார்கள்.