பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

15

கம்பெனிப் பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிக் காட்ட இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டனர். என்றாலும் உறிக்கிக்கு ஏற்பட்ட கொடுமை தங்களுக்கு நேரா வண்ணம் பார்த்துக்கொண்டனர். '

இதழ்களின் போக்கும் சட்டங்களும்

கி.பி.1812இல் கிறித்துவத் தமிழரால் சென்னையில் 'மாசத்தினச் சரிதை' என்னும் இதழ் நடத்தப்பெற்றிருக்கின்றது. ஒரு மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால முறைப்படி செய்து மாத முடிவில் தினசரிச் செய்தியாக இவ்விதழ் வெளியிட்டது. இவ்விதழ் வெளியிட்ட அச்சுக்கூடத்தின் மூலம்தான் கி.பி.1812இல் 'திருக்குறள் மூலமும் நாலடியார் மூலமும்' என்னும் முதல் சுவடிப்பதிப்பு நூல் வெளிவந்து இருக்கின்றது. இவ்விதழின் இதழ்ப் பகுதிகள் எதுவும் இன்று கிடைக்கவில்லை என்றாலும் இதழ் இருந்தமைக்கான சான்று நமக்குக் கிடைத்திருக்கின்றது எனலாம்.

இந்நிலையில் கி.பி.1818இல் வில்லியம் பட்டர்வொர்த் பெய்லியின் 'தணிக்கைச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது. "அரசாங்கத்தில் நடைமுறைச் செயல்களுக்குத் தடையாகும் வகையில் வெளியிடப்படும் செய்திகளைத் தடுப்பதும், பொதுமக்களிடையில் அரசாங்கத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரவச் செய்யும் வகையில் வெளியிடப்படும் செய்திப் பகுதிகளைத் தடுப்பதும், சமய உணர்வு காரணமாக எவர்க்குள்ளும் வேறுபாடுகள் வளர்ந்துவிடக் கூடாது என்று கருத்தாகப் பார்த்துக் கொள்வதும், இந்திய மக்களின் உணர்வுகள் பாதிக்காத வகையில் இயங்கச் செய்வதும், எங்கும் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதுமே தணிக்கை முறையின் கடமைகளாக இருந்தன. இம்முறையில் இதழாசி ரியர்கள் பொதுவான தங்கள் பகுதிவாழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தடைசெய்யப்பட வில்லை" (மேற்கோள், இந்திய இதழ்கள், ப.162).