பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

39

மர்டாக் பட்டியலில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளிவந்த இதழாகத் 'தமிழ் மேகசி' னைக் குறிப்பிடுகிறார். இவ்விதழ் சென்னைக் கிறித்துவக் கல்விக் கழகத்தின் சார்பில் 1831ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஜான்மர்டாக் குறிப்பிடும் பட்டியலின்படி 'தமிழ் மேகசின்' (1831)ம், அ. மா.சாமி குறிப்பிடும் பட்டியலின்படி 'மாசத்தினச்சரிதை' (1812)ம் தமிழ் மொழியில் தமிழ் நாட்டில் வெளிவந்த முதல் இதழ் என்கிறார்கள். இதில் எது சரியானது? இதழ்களின் பட்டியலில் 'தமிழ் மேகசின்' இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் 'மாசத்தினச்சரிதை' இதழ்களின் பட்டியலில் இடம்பெற வில்லை. மாறாக, 'மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம்' என்னும் அச்சுக்கூடத்தின் பெயரைக் கொண்டு 'மாசத்தினச் சரிதை' இதழைக் குறிப்பிடுகின்றார் அ.மா.சாமி.

உலகப் பொது மறையாம் திருக்குறள் முதல் முதலில் அச்சேறியது கி.பி.1812இல் "திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி விச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடி கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற் பதிப்பித்த காயிதப் பொத்தகம்" என்று அச்சேற்றியவர் களைப் பற்றி அந்நூலிலேயே குறிப்புக் காணப்படுகிறது. இந்நூலை யார் எங்கு எப்பொழுது எந்த அச்சகத்தில் - அச்சிடப்பட்டது என்பதை இந்நூலின் முகப்பு அட்டையில் இடம்பெற்றிருக்கும் குறிப்புத் தெரிவிக்கின்றது. "இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கீரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகர மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசனால் அச்சில் பதிக்கப்பட்டது. மாசத்தினச்சரிதையின் அச்சுக்கூடம். இ.ஆண்டு 1812" என்னும் குறிப்பால் மாசத்தினச்சரிதை என்னும் அச்சுக்கூடத்தில் இருந்து 1812ஆம் வருடம் தஞ்சை நகர மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசன் அவர்களால் சென்னையிலிருந்து 'திருக்குறள் - மூலபாடம் வெளிவந்ததாக அறிய முடிகிறது.