பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

முத்திங்களிதழ்கள்

43

மூன்று திங்களுக்கொருமுறை என ஆண்டிற்கு நான்கு முறை வெளிவரும் இதழை 'முத்திங்களிதழ்' (காலாண்டிதழ்) எனலாம். இது, எண்ணிக்கையிலும் விற்பனை அளவிலும் குறைவாகத்தான் இருக்கின்றது. ஆயினும் பல துறைகளில் விரிவான ஆய்வு நடத்துபவர்களுக்கு இவ்வகையான இதழ் பெரிதும் பயன்படுகின்றது. பொதுவாக, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இவ்வகை இதழ் வெளியிடுவதைப் பார்க்க முடிகின்றது. பல்வேறு ஆய்வுகள் பற்றிய கட்டுரைகளை மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கவும், வெளியிடவும் முடியாது. ஏனென்றால் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமான பக்கங்களைக் கொண்டவையாகவும் ஆழமான ஆராய்ச்சிக் கருத்துடனும் இருக்கும். பெரும்பாலான முத்திங்களிதழ்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டு தனியொரு நூலாகவே வெளிவருவதைப் பார்க்க முடிகிறது. முத்திங்களிதழ்களில் இலக்கியம், தத்துவம், கல்வி, சட்டம், மொழியியல், கலை, வரலாறு, நாட்டுப்புறவியல் போன்றன பற்றிய கட்டுரைகளே மிகுதியும் இடம்பெறுகின்றன.

நாற்றிங்கள், அரையாண்டு மற்றும் ஆண்டிதழ்கள்

நான்கு திங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழை 'நாற்றிங்களிதழ்' என்றும், ஆறு திங்களுக்கு ஒருமுறை வெளி வரும் இதழை 'அரையாண்டிதழ் என்றும், ஆண்டிற்கு ஒரு முறை வெளிவரும் இதழை 'ஆண்டிதழ்' என்றும் கூறலாம். முத்திங்களிதழ்கள் ஆற்றும் பணிகளையே இவ்விதழ்களும் ஆற்றுகின்றன. என்றாலும் கால அடிப்படையில் வேறுபட்டு நிற்கின்றன. இவ்வகையான இதழ்களில் அரசியல் பற்றிய செய்திகள் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். இலக்கியம், வணிகம், நிதி, சட்டம், பொது நிர்வாகம், தொழில்கள் தொடர்பான கட்டுரைகள்தாம் இவ்வகையான இதழ்களில் பெரும்பான்மையாக இருக்கக் காணலாம். பள்ளி, கல்லூரி, மத்திய - மாநில அரசுகளின் ஆண்டறிக்கைகளும் இவ்வகையினவே.