பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

47

பார்வையிட்ட நூலகங்களில் சில இதழ்கள் தொடக்கம் முதல் இறுதி வரை கிடைத்தன. சில இதழ்களின் பகுதிகள் முழுமையும் கிடைக்கவில்லை. ஏனெனில் இதழ்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு. எனவே, கிடைத்த முழுமை/ குறைப்பகுதிகளைப் பார்வையிட்டு அவற்றிலிருந்து சுவடிப்பதிப்பு நூல்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. நேரடியாக ஓலை/காகிதச் சுவடிகளிலிருந்து பருவ இதழ்களில் பதிப்பிக்கப்பெற்ற நூல்களும், மறுபதிப்பு நூல்களும், ஏதாவதொரு வகையில் சுவடியோடு தொடர்பு கொண்டு பதிப்பிக்கப்பெற்ற நூல்களும் இங்குத் தெரிவு செய்யப்பெற்றுள்ளன.

சுவடிப்பதிப்பு வரலாற்றில் பருவ இதழ்களில் வெளி வந்த நூல்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. ஆனால், இந்நூல்கள் பருவ இதழ்கள் வெளிவந்த காலத்தில் மக்களால் பேசப்பட்டு வந்தனவேயன்றி அதன்பின் பேசுவாரற்று இதழோடு நின்றுவிட்டன. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழின. உணர்வுக்கும் இச்சுவடிப் பதிப்புகள் பெருந்துணை புரிந்திருக் கின்றன. இதழ்களின் வழியாக அவை தலைகாட்டத் தவறி யிருந்தால் பல நூல்களின் பெயர்களைக் கூட நாம் அறிந்திருக்க முடியாது. அந்த வகையில் இதழ்களின் தமிழ்ப்பணியை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டவேண்டும்.

இலக்கியப் பருவ இதழ்களில் வெளிவந்த நூல்களின் சுவடிகள் அழிந்த நிலையில் மறைந்துபோன தமிழ் நூல்களாக - மறைந்திருக்கும் இதழ்களிலிருந்து இயன்றவரை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இந்நூல் அமைகின்றது. இவ்வகையில் இன்று அறிமுகமில்லாத சில நூல்களையாவது தமிழிலக்கிய வரலாற்றில் இடம்பெறச் செய்வதே இதன் நோக்கமாகும். இதனால் தமிழிலக்கியத்தின் பரப்பு மேலும் விரிவடைவதோடு மட்டுமல்லாமல் சுவடிப்பதிப்பு வரலாற் றிற்கும் ஒரு தெளிவு பிறக்கும் எனலாம்.