பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

காகிதத்தில் அச்சினால் பதிப்பிக்கப் பெற்றவையே சுவடிப் பதிப்புகள் எனலாம். இச்சுவடிப் பதிப்பானது பழைய பதிப்பு, திருத்தப் பதிப்பு, ஆராய்ச்சிப் பதிப்பு என மூன்று வகைப்படும்.

சுவடியிலுள்ள எழுத்தமைதியை அவ்வாறே ஏற்றுக் கொண்டு -ஏட்டிலுள்ளவாறே அச்சில் பதிப்பித்ததைப் 'பழைய பதிப்பு' (பாடல், அதன்கீழ் உரை என்ற பிரிப்பு முறையால் மட்டும் வேறுபட்டுக் காணப்படும்; பாடல் அடிகளாகவோ அடிகள் சீர்களாகவோ பிரித்துக் காட்டப்பெறாத நிலையில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியில்லாமலும் ஒற்றை இரட்டைக் கொம்புகளுக்கு வேறுபாடில்லாமலும் அச்சிடுதல்) எனலாம்.

மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டும், ஒற்றை இரட்டைக் கொம்புகளுக்கு வேறுபாடு காட்டியும் பொருள் தெளிவுக்கு நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தியும் வரி யமைப்புகள், சீர் அமைப்புகளை உருவாக்கியும் இன்றைய அச்சு வடிவில் பதிப்பிப்பதைத் 'திருத்தப் பதிப்பு' எனலாம். நூலில் காணும் ஐயங்களை நீக்கிப் பொருள் தெளிவு ஏற்படவும், படிப்பவர்கள் தாமே படத்தை உறுதிசெய்து கொள்வதற்காக எல்லாம் பிரதிகளிலும் காணப்படும் பாடவேறுபாடுகளைக் குறிப்பதுவும், பாடல்கள் உரைகள் எனத் தனித்தனியாகப் பிரிப்பதுவும் போன்ற அமைப்பு களையும் இதில் மேற்கொள்ளலாம்.

பல சுவடிகளை ஆய்ந்து, சிறந்த பாடத்தைத் தேர்ந்து சந்திகளைப் பிரிப்பதும், தெளிவுரை, குறிப்புரை, கருத்துரை போன்ற அமைப்புக்களுடன் நூலின் முழுத் தன்மையையும் ஆய்ந்து நூலில் காணப்படும் சிறப்புச் செய்திகள், நூலாசிரியர், உரையாசிரியர் பாட்டுடைத் தலைவர் ஆகியோர் வரலாறுகள், பாட்டு முதற்குறிப்பு அகரநிரல், அருஞ்சொற்பொருள் அகரநிரல், பதிப்பு வரலாறு போன்ற அமைப்புகளுடைய பதிப்பை 'ஆராய்ச்சிப் பதிப்பு' எனலாம்.

ஆக, மூலயேடு, படியேடு, உரையேடு என்றிருந்த சுவடிகள் பழைய பதிப்பு, திருத்தப் பதிப்பு, ஆராய்ச்சிப் பதிப்பு என்ற நிலையில் வெளிவந்துள்ளன.