பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பாதாசார்ய பரம்பரையான ஸ்ரீகாமகோடி பீடத்தின் வரலாறு, அவற்றின் பெருமைகள் போன்றன இவ்விதழில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பொதுவாக, தர்ம தத்துவங்களை

மக்கள் நன்றாக உணரச் செய்வதையே தலையாய நோக்கமாகக் கொண்ட இவ்விதழ் 'மெய்ஞ்ஞானத் தங்கம்' எனும் சுவடிப் பதிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீகுமரகுருபரர்

‘ஸ்ரீகுமரகுருபரர்' எனும் திங்களிதழ் ம.வே.பசுபதியை ஆசிரியராகக் கொண்டு திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் வெளியீடாக, குமரகுருபரனின் மறுதோன்றலாக 1978ஆம் ஆண்டு ஐப்பசி முதல் வெளிவந்துகொண்டு இருக்கின்றது. இதில் விடையரங்கம்,நூல்நிறை (நூல் மதிப்புரை),சமயம், இலக்கியம், இலக்கணம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், திருக்கணித பஞ்சாங்கம், இன்றைய புலவர்தம் நூல்கள், நூலாராய்ச்சி, சொல்லாராய்ச்சி, மடத்து நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், திருத்தலக் குறிப்புகள், குமரகுருபரர் பிரபந்தங்கள் சிலவற்றிற்கான உரைகள், குமரகுருபரர் பிரபந்தங்கள் சிலவற்றிற்கான மொழிபெயர்ப்புகள், ஏனையோரின் இலக்கிய மொழிபெயர்ப்புகள், அரிய நூல் வெளியீடுகள் போன்றன வெளிவந்துள்ளன. மேலும் இவ்விதழில் 'குமரகுருபர சுவாமிகள் சரித்திர சார பஞ்சம், ஞானாமிர்தம் பழைய உரையுடன், திருத்தொண்டர் மாலை, பனசைச் சிலேடை வெண்பா உரையுடன் ஆகிய நான்கு சுவடிப்பதிப்புகளும் வெளிவந்துள்ளன.

மாதாந்திர அமுதம்

-

'மாதாந்திர அமுதம்' எனும் திங்களிதழ் தவத்திரு சுந்தரசுவாமிகளைச் சிறப்பாசிரியராகக் கொண்டு கோவை கௌமார மடாலயத்தின் வெளியீடாக 1980ஆம் ஆண்டு சூலை முதல் வெளிவந்துகொண்டிருக்கின்றது. தவத்திரு சுந்தர சுவாமிகள் குடம் 1 முதல் குடம் 15 வரையில் உள்ள இதழ்ப் பகுதிகளுக்குச் சிறப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.