பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பர்மாவில் பெரியார்

"செய்தி கேட்டீங்களா?" என்றார்.

ஆமென்றேன்.

"என்ன ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?" என்றார்.

"நாம் என்ன செய்வதற்கிருக்கிறது?" என்றேன்.

"பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கலாமே!" என்றார்.

"நாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள்; திராவிடர் கழகம் அல்ல" என்றேன்.

"ஆம், பெரியார் நம் தலைவர், அவர் முதன் முதலாக பர்மாவுக்கு வருகிறார், நாம் தானே வரவேற்புக் கொடுக்க வேண்டும்" என்றார்.

"கண்ணீர்த்துளிகள்" என்ற பெயரால் பெரியாரால் அழைக்கப்பட்ட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்தான் தலைவர்.

நண்பர் சேரன் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை."பெரியார் நம் தலைவர்", என்ற உண்மையை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.

"சரி.பொதுக்குழுவை கூட்டுவோம், முடிவெடுப்போம்" என்று கூறி அன்றே பொதுக்குழு உறுப்பினர்கள் ஐம்பது பேருக்கும் அழைப்பு அனுப்பி மாலை ஓர் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம்.

பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கவேண்டும் என்று ஆறு தோழர்கள் பேசினார்கள். இறுதியில் நான் தீர்மானத்தை முன் மொழிந்தேன்.

நான்கு தோழர்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.