பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பர்மாவில் பெரியார்

கூடாதென்று சொன்னாரோ அதையெல்லாம் செய்யும் மதமாக இருக்கிறது. மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத புத்தர் பல பிறப்புப் பிறந்ததாக சாதகக் கதைகள் கூறுகின்றன.

"இன்றுள்ள புத்த பிட்சுக்கள் ஜோதிடம் பார்க்கிறார்கள், மக்களுக்கு மந்திரவாதிகளாக பில்லி சூனியம் ஆக்குபவர்களாகவும் நீக்குபவர்களாகவும் செயல்படுகிறார்கள். தங்கள் காலடியில் மக்கள் தெய்வமாக விழுந்து வணங்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

"மக்களோ, புத்த பிட்சுக்கள் தெய்வ அருள் பெற்றவர்கள் என்றும், அவர்களுக்குச் செய்யும் தொண்டு மோட்சத்தில் சேர்க்கும் என்றும் நம்புகிறார்கள். இங்குள்ள பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துப்போட்டு அதன் மீது பிட்சுக்கள் பாதம் பட நடந்து போவதால் சுவர்க்கத்தில் இடங்கிடைக்கும் என்று நம்புகிறார்கள். பேய் பிடித்தல், பேய் விரட்டல் முதலியவை தொடர்ந்து நடைபெறுகின்றன. சிறு தெய்வவணக்கம் சிறிதும் குறைய வில்லை. சிறு தேவதைகளுக்கு நடக்கும் பூசைகளும் குறையவில்லை.

"புத்தமதம் இன்று மற்றொரு இந்து மதமாகவே காட்சியளிக்கிறது" நான் சொல்லி முடித்ததும், புத்த மதம் இவ்வளவு மோசமாக இருக்கிறதா? என்று வியப்படைந்தார்.

***

சிங்கப்பூரிலிருந்து கப்பலில் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த பெரியாரை "ஸ்டேட்ஸ்மன்" செய்தியாளர் பேட்டிகண்டு புத்தமதத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.