பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யத்தில் மேலே கிளம்புகிறது. காற்றடிக்கும் திசையில் போக முயல்கிறது. அப்படிப் போகாமல் பிடித்துக்கொள்வதற்காகத்தான் பலூனில் லேசான வாயுவை அடைத்து விற்கும் பலூன்காரன் ஒரு நீண்ட நூலில் பலூனைக் கட்டிக் கொடுக்கிறான், நாம் பலூனைப் பறக்க விடும்போது அது எங்கேயாவது ஓடிவிடாமல் அதில் கட்டியுள்ள நூலைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறோம்.

இந்தப் பலூனிலாவது லேசான வாயுவிருக்கிறது. ஆனால்,பிரான்சில் கற்பனை செய்த செம்புப் பந்துகளுக்குள்ளே ஒன்றுமே இருக்காது. அதனால், அவை நன்றாகக் காற்றில் மிதந்து மேலே செல்லும். பந்துகள் பெரியவையாக இருந்தால் அந்தப் பந்துகளோடு சேர்ந்திருக்கும் படகும் காற்றில் மிதக்கும்; அவர் செய்தது நல்ல யோசனை தான். ஆனால், அந்த யோசனைப்படி பந்துகளைச் செய்து முடிப்பதிலே எத்தனையோ சிரமம் உண்டு. அந்தச் சிரமங்களையெல்லாம் போக்கிவிட்டு, இந்தப் படகைப் பறக்க வைப்பது முடியாத காரியம். முதலாவது செம்புப் பந்திலுள்ள காற்றையெல்லாம் வெளியேற்றி அடைத்து விட்டால் வெளியிலே சுற்றிலுமுள்ள காற்று அந்தப் பந்தை வேகமாக அழுத்தத் தொடங்கும். உள்ளே காற்றிருக்கும் போது இப்படி அழுத்தம் ஏற்படாது ; ஏனென்றால், உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தமும் வெளியிலுள்ள காற்றின் அழுத்தமும் ஒன்றுக்கொன்று சமமாக இருப்பதால் செப்புத் தகட்டின் எந்தப் பாகத்திலும் அதிகமான அழுத்தம் இருக்காது. ஆனால், உள்ளே உள்ள காற்றை அகற்றிவிட்டால் வெளிக்காற்று மட்டும் பந்தை அழுத்தத் தொடங்கும். அந்த அழுத்தத்தைத் தாங்கக்கூடிய அளவு உறுதியான செப்புத் தகட்டினல் அந்தப் பந்தைச் செய்ய வேண்டும். அப்பொழுது பந்தின் கனம் மிக அதிகமாகி விடும். கனம் அதிகமானால் படகு காற்றிலே மிதக்க முடியாது. இப்படி இன்னும் பல சிரமங்கள் உண்டு. அதனால், இந்த முயற்சி வெற்றியடையவில்லை. ஆனால், ரப்பர் பலூன் போலவே பெரிய பலூன் கட்டும் முயற்சி தொடங்கியது.

6