பக்கம்:பறவைகளைப் பார்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IX. உடல் அமைப்பு

பறவையின் உடல் அமைப்பை ஆராய்வதும் ஒவ்வொரு பகுதியின் பயனைத் தெரிந்து கொள்வதும் இன்னும் அதிக சுவை பயப்பதாகும். பறவையின் எலும்புக் கூடு அநேகமாக மனிதனின் எலும்புக் கூட்டை ஒத்து இருக்கிறது. பறவைக்கு இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் ஒரு வாலும் உண்டு. எளிதில் மடக்கி வைத்துக்கொள்ள வசதியாகவும் தோள்பட்டை இயங்குவதற்கு வசதியாகவும் சிறகுகள் அமைந்துள்ளன. பறவையின் சிறகு மனிதனுடைய கரத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் சிறகின் நுனியிலே உள்ள கையில் ஒரே ஒரு நீளமான பெரிய விரல் தான் இருக்கும். இதில் உள்ள எலும்புகளின் மேல் சிறகுத் தசைகளும் இறகுகளும் வளைவாக அமைந்துள்ளன. திறந்த குடையை வேகமாக மேலும் கீழும் தள்ளினால், மேலே தள்ளுவதே எளிதாக இருக்கும். ஏன்? கீழேதள்ளும் போது காற்று தடை செய்கின்றது. இந்தக் காற்றுத் தடையைப் பயன்படுத்தியே பொதுவாகப் பறவைகள் பறக்கின்றன என்று கூறலாம்.

சிறகில் உள்ள இறகுகள் திட்டவட்டமான சில தொகுதிகளாக அமைந்துள்ளன. கை என்று சொல்லக் கூடிய நீளமான விரலிலே பறப்பதற்குச் சாதகமான முதல் 10 இறகுகள் இருக்கின்றன. திசைமாறுவதற்கு இவை பயன்படும். சிறகின் மேல் பகுதியிலே பறப்பதற்கு சாதகமான 12 அல்லது 14 இறகுகள் இருக்கும்.

இறகுகள் அடுக்கடுக்காக இருப்பதால் பறப்பதற்கு எளிதாகின்றது. சிறது தோளோடு சேரும் பகுதியில் சில இறகுத் தொகுதிகள் உண்டு.

40