பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உதாரணத்திற்கு ஒன்று, வாய்க்குள் பற்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வளர்ந்து வந்து, குறிப்பிட்ட அளவு வந்ததும் நின்று கொண்டு விடுகின்றது. நிறுத்திக் கொண்டு விடுகிறது.

நான் நாக்கு போல நீளமாகவும், மூக்கு போல பெரிதாகவும் வளர வேண்டும் என்று பற்களானது அடம் பிடித்து வளர ஆரம்பித்து விட்டால் வாயின் கதி என்ன? முகத்தின் லட்சணம் எப்படி இருக்கும்?

ஒரு உடலானது 5 அடி முதல் 6 அடி வரையிலும் இயல்பான உயரம் கொண்டு வளருகிறது. அதுவே எட்டடியாக உயர்ந்தால், அல்லது இரண்டு அடியாகக் குறைந்தால் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

ஆகவே, உள்ளுறுப்புகளுக்கு ஓர் ஒழுங்கான அமைப்பு இருப்பதோடு, செயல்படுகின்ற சிரத்தையும் உற்சாகமான ஊக்கமும் வளர்ந்து கொள்கிற வலிமைத்திறனும் உண்டு.

அப்படிப்பட்ட உடலானது உவப்போடும் சிறப்போடும் செயல்படுவதற்கு அந்த உடலுக்குச் சொந்தக்காரர்தானே உகந்த காரியங்களைச் செய்ய வேண்டும்? செய்தாக வேண்டும்? நாம் செய்கிறோமா? என்றாவது சிந்தித்தோமா? இல்லையே!

உறுப்புக்களின் உள்ளார்ந்த பலம் என்றால் என்ன? அந்த பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

நாம் என்னதான் செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய ஒரே காரியம் இப்படித்தான் அமைய வேண்டும்.