பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்

33


5.சிறப்பான வாழ்வுக்குத் திறப்பு விழா!

மனிதர்களைக் கொல்லும் வியாதிகளில், முதன்மையானது இருதய நோய் என்பதுதான் எல்லோரின் கணிப்பாகும்.

முன்பெல்லாம் 40 வயதிலிருந்து 59 வயது வரை உள்ளவர்கள்தான், இருதய நோயால் இறக்கின்றார்கள் என்று கூறிய அறிவியல் புள்ளி விவரம் பொய்யாகி விட்டது.

இப்போதெல்லாம் இந்த இருதய வியாதி, இருபது வயதிலிருந்தே தொடங்கி விடுகிறது.

இதற்குக் காரணம் உழைப்பின்மை. பலக்குறைவு, சக்தியைச் செலவழிப்பதில் ஜெட் வேகம், சக்தியைச் சேர்க்க, சேமிக்கும் முயற்சியில் ஆமை வேகம். அலட்சியப் போக்கு. அக்கறையின்மை. அறிவுரையை ஏற்க மறுக்கும், வெறுத்து ஒதுக்கும் அடாவடித்தனம்.

ஒரு குறிப்பிட்ட மீனவப் பகுதியை 22 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு பேராசிரியர் ஆய்வு செய்தபோது பெற்ற முடிவுகளில் முக்கியமான ஒன்றைப் படியுங்கள்.

உட்கார்ந்து வேலை செய்பவர்கள், ஒரு வேலையும் செய்யாமல் சும்மா உறங்கிக் கழிப்பவர்கள், சோம்பேறித்தனமாக ஊர் சுற்றி வருபவர்களுக்குத்தான் அதிக அளவில் இதய நோய் அதாவது மாரடைப்பு ஏற்படுகிறது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு.