பக்கம்:பல்சுவை விருந்து.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 星4了

பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயைப் போலவே, அச்சில் வெளியானவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட பல அறிஞர்களின் பாராட்டுதலைப் பெறுங்கால் உண்மையில் பெருமிதம் கொள்வார் என்பது உறுதி. வரலாற்று நூலுக்கு இது சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இப்படித்தான் வரலாறு சுவையாக எழுதப்பெறுதல் வேண்டும் என்பதற்கு இஃது ஒரு வழிகாட்டியாகத் திகழும் என்பதற்கு ஐயமில்லை.

சவகர்லால் நேருவின் 'நான் கண்ட இந்தியா (Dis covery of India) என்ற நூலும் இத்தகையதே. அஃது இந்திய மட்டத்தில் எழுதப்பெற்றது. தென்னகத்தின் செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்டப் பெற்றுள்ளன. வரலாற்று ஆசிரியர்கள் தாம் சொல்வனவற்றைச் சுவையாகச் சொல்ல வேண்டும். அவற்றில் உண்மையும் இருக்க வேண்டும். சுவை கருதி கற்பனைக்கோ இட்டுக் கட்டுதலுக்கோ புனைந்துரைக்கோ எவ்வாற்றானும் இடந்தருதல் கூடாது. நான்கண்ட இந்தியாவும்: வரலாற்றாசிரியர்கட்கு எடுத்துக்காட்டாகத் திகழும் நூலாகும்.

ஒரு காலத்தில் நாட்டை ஆண்ட அரசர் பரம்பரைகளை எழுதுவதே நாட்டு வரலாறு என்ற மரபு இருந்து வந்தது. முடியாட்சி நிலவின காலத்தில் உலகெங்கும் இந்த முறை தான் கையாளப் பெற்று வந்தது. முடியாட்சி ஒழிந்து குடியாட்சி ஏற்பட்ட பிறகு இம்முறை கை விடப் பெற்று ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை நிலை, கல்வி நிலை, சமய நிலை, தொழில் வளர்ச்சி, வாணிக முறை, பண்பாட்டு வளர்ச்சி இவையெல்லாம் அடங்கியிருக்குமாறு எழுதுவதே உண்மையான நாட்டு வரலாறு என்று கருதப் பெறுகின்றது. இம் முறைதான் இன்று மேற் கொள்ளப் பெறுகின்றது. இதுவே நேரிய, சீரிய முறையுமாகும்.

மேற்கூறிய முறையில் பல்வேறு வரலாறுகள் எழுதப் பெறுதல் வேண்டும். நம்பகமான செய்திகள் சுவையாக எழுதப் பெறும் முறையே வரலாறு எழுதுவதன் உயிர் நாடியாகும்.