பக்கம்:பல்சுவை விருந்து.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

9. திருக்குறள் - வாழ்வுச் செல்வம்"

பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ?

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கும் வாழ்க்கைத் கூறுகள். இந்த நான்கிற்கு மேல் ஐந்தாவதாக ஓர் உறுதிப் பொருள் ஒன்று இருப்பதாக உலகில் எவரும் கூறிற்றிலர், வாழ்வின் இயற்கைகளை வடித்தெடுத்த நூற் பொருள்க ளெல்லாம் இவற்றையே மையமாக வைத்து சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆகவேதான் 'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே (நன்னூல்) என்று பவணந்தி முனிவரும் துணிந்து அறுதியிட்டுக் கூறினார்.

திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந் தவர் என்றும் காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை யாதலின், அவர் கூறிய வாழ்க்கை உண்மைகள் இன்றளவும் போற்றிக் கடைப்பிடிப்பனவாக உள்ளன. இவை எல்லா மக்களுக்கும் பயன்படுவனவாய், ஆட்சிக்குரிய சட்ட நூல்களை விடச் செல்வாக்கு உடையனவாய் மக்களின் உள்ளங்களையே கோயில்களாகக் கொண்டு வாழ்வனவாய் இருத்தலின் பகவத் கீதை, கிறித்தவர் மறையான விவிலியம், இஸ்லாமியர் மறை யான குர்-ஆன் முதலியன போல திருக்குறளும் தமிழ் மறை யாய்ச் சாதி சமயம் நிறம் நாடு முதலிய வேறுபாடு கருதாது எல்லார்க்கும் பயன்படும் வாழ்வின் வழிகாட்டியாய்த் திகழ் கின்றது. திருக்குறளை மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு ஓதி உணர வேண்டும். திருவள்ளுவர் பல்துறை அறிஞர் சிந்தனைச் செல்வர். இதனை அவர் நூலின் வழி உணர லாம். சிலவற்றை எடுத்துக்காட்டி விளக்குதல் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

  • உலகத் திருக்குறள் மாநாட்டு மலர் (ஆகஸ்டு - 1962)