பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

13



என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான். இச்செய்தியைக் கூறுவதே ‘மயிதவோலுப் பட்டயம்’ என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும். அப்பொழுது இவன்தந்தை பல்லவ மஹாராஜன் என்பதும், இவன் இளமஹாராஜன் என்பதும், இவனது நாடு வடக்கே துங்கபத்திரையாறுவரை பரவி இருந்தது என்பதும், இவன் காஞ்சியிலிருந்து இப் பட்டயம் விடுத்ததால் இவன், புதிதாகப் பல்லவ அரசன் வென்ற தொண்டை நாட்டை இளவரசனாக இருந்து ஆண்டுவந்தான் என்பதும் இப் பட்டயத்தால் ஊகிக்கத் தக்க செய்திகள் ஆகும்.

மஹா ராஜாதிராஜன்

இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்ட பட்டயம் ‘ஹிரஹதகல்லிப் பட்டயம்’ என்பது. ஹிரஹதகல்லி பல்லாரி ஜில்லாவில் உள்ள சிற்றுார் ஆகும். தானமாக விடப்பட்ட கிராமத்தோட்டம் சாதவாஹன ராஷ்டிரத்தில் உள்ளது. சாதவாஹனர்க்குச் சொந்தமாக இருந்த நாட்டில் உள்ள ஊர்த் தோட்டத்தைப் பல்லவன் தானம் கொடுத்தான் எனின், சாதவாஹன ராஷ்டிரம் பல்லவன் ஆட்சிக்கு மாறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறதன்றோ? இதனால், சிவஸ்கந்தவர்மன் வடக்கே தனது நாட்டை விரிவாக்கியிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இப்பட்டயத்தில் சிவஸ்கந்தவர்மன் தன்னைத் தர்ம-மஹா ராஜாதிராஜன் என்று குறித்திருக்கிறான். இதனால், இவன் அரசர் பலரை வென்று பல்லவநாட்டை விரிவாக்கினவன் என்பது புலனாகும். இவன் அக்நிஷ் டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்ற பெரு வேள்விகளைச்செய்தவன் என்று இப்பட்டயம் கூறுகின்றது. இவற்றுள் அக்நிஷ்டோமம் என்பது வசந்த காலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப்படும் வேள்வியாகும்: வாஜபேயம் என்பது உயர்ந்த அரசநிலை, எய்தற்பொருட்டுச்