பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

21



இவனுடைய போர்ச் செயல்கள்

“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரிபாயப்பெற்ற செழிப்புள்ள சோழநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பாற்றினான்” என்று பல்லவர் பட்டயம் ஒன்று பகர்கின்றது. மற்றொரு பட்டயம், “...பிறகு இவ்வுலகில் சிங்கம் போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் பெயர் பெற்றவன். அவ்வீரன் களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றி கொண்டான்” என்று கூறுகிறது. அவந்தி சுந்தரி கதாசாரம் என்ற வடமொழி நூல், “பல்லவர் மரபில் சிம்ம விஷ்ணு என்பவன் தோன்றினான். அவன் காஞ்சியிலிருந்து இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன், தன் வீரத்தாலும் ஆண்மையாலும் பகை அரசர்களுடைய பொருள்களைத் தனக்கு உரிமையாகக் கொண்டான்” என்று கூறுகின்றது.

இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஆராயின், சிம்மவிஷ்ணு களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர்களுடன் போரிட்டான்; அவர்களை வென்றான்; காஞ்சியைக் கைப்பற்றினான்; பல்லவ நாட்டைத் தெற்கே விரிவாக்கினான் என்பன அறியலாம். இவன் மகனான மஹேந்திரவர்மன் ஆட்சி தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களிலும் புதுக்கோட்டைச் சீமையிலும் பரவி இருந்தது. ஆனால், அப்பகுதிகளை மஹேந்திரன் தன் காலத்திற் கைப்பற்றினான் என்று கூறமுடியாது. ஆதலால், அப்பகுதிகள் சிம்மவிஷ்ணு காலத்திலேயே பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டனவாதல் வேண்டும். அவ்வாறு அப்பகுதிகள் வரை இவன் கைப்பற்றியதாற்றான். சிம்மவிஷ்ணு மழ ருடனும் பாண்டியருடனும் போரிட வேண்டியவன் ஆயினன்.