பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

35



சமண வாழ்க்கை

மருள்நீக்கியார் சமணர் சொற்பொழிவுகளைக் கேட்டார்; அச்சமயத்தில் எவ்வாறோ அவருக்குப் பற்று உண்டானது. அதனால் அவர் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்குச் சென்றார்; ஆடையற்ற திகம்பர சமண முனிவராக மாறினார்; பல ஆண்டுகள் அங்குத் தங்கிச் சமண சமயக் கொள்கைகளையும் பிற உண்மைகளையும் உணர்ந்தார், சமண முனிவர் பாராட்டுக்கு உரியவராகித் தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்; பெளத்தரைப் பலவாதங்களில் வென்று புகழ் பெற்றார். அவரது மத மாற்றத்தை அறிந்த திலகவதியார் திருவதிகையில் உள்ள சிவபெருமானிடம் முறையிட்டுத் தம் தம்பியை மீட்டும் சைவ சமயத்தில் திருப்பியருளவேண்டும் என்று வரம் கிடந்தார். அவ்வம்மையார் அங்கு ஒரு மடம் அமைத்துக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இந்நிலையில் மருள்நீக்கியார் என்ற தருமசேனர் பாடலிபுரத்துச் சமண மடத்தில் சிறந்த சமணசமயத் தலைவராக இருந்து வந்தார். தருமசேனரது புகழை நமது மஹேந்திரவர்மன் நன்கு அறிந்திருந்தான்.

பல்லவ நாட்டுச் சமயநிலை

மருள்நீக்கியார் தருமசேனராகச் சமண மடத்தில் வாழ்ந்தபொழுது பெளத்தமும் சைவ வைணவங்களும் செல்வாக்கில் குன்றி இருந்தன. கிருஷ்ணையாறு முதல் காவிரியாறுவரை அரசாண்ட மஹேந்திரனே சமணன் எனின், எந்த மதம் அவன் அரசியலில் செல்வாக்கைப் பெற முடியும் என்று நாம் சொல்லவும் வேண்டுமா?